ஏசி பிரச்சனை (வாடிக்கையாளருடன் தருமபுரி செய்தியாளர் கோபால் பேசிய ஆடியோ) தருமபுரி:தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தற்போது வெயிலின் தாக்கமும் மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. மக்கள் இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்ட நீராகாரங்களை நோக்கி அலை மோதுகின்றனர்.
மேலும் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்கள், வீட்டை எப்படி கூலாக வைப்பது என பலவாறு யோசித்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து 106.7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.
பகல் பொழுது மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் அனல் குறையாமல் இருப்பதால் பலருக்கு தோல் தொடர்பான வியாதிகள், கொப்புளங்கள் உள்ளிட்டவை ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் குறிப்பாக தருமபுரி நகரப் பகுதியில், வெப்பத்தைச் சமாளிக்க ஏசி வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் பல முன்னணி நிறுவனங்களின் ஏசி கிடைப்பதற்கு 8 நாட்கள் வரை காலதாமதம் ஆவதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்படி வாங்கப்பட்ட ஏசியை, வீட்டில் பொருத்துவதற்கு ஐந்து முதல் பத்து நாட்கள் ஆவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏசி விற்பனை அதிகரித்துள்ளபோதிலும், அதனைப் பொருத்துவதற்கான ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக ஏசி வாங்கினாலும் அதனை பொருத்துவதற்கு ஐந்து முதல் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிரபல வணிக நிறுவனத்தில் ஏசி பெற்ற வழக்கறிஞர் வெங்கடேஷன் கூறுகையில், "ஏசி வாங்கிய போது 48 மணி நேரத்தில் பொருத்தி தருவதாக விற்பனை செய்த கடையில் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி வரவில்லை. விற்பனை செய்த கடையைத் தொடர்பு கொண்டு தொடர்ந்து எனது கோரிக்கையை வைத்து வந்தேன். கடைசியாக ஐந்து நாட்கள் கழித்து எனக்கு வீட்டில் ஏசியை பொருத்திக் கொடுத்தார்கள்.
இதற்கிடையே என் முகநூல் வழியாக, ஏசி வாங்கி 48 மணி நேரத்தில் பொருத்தி தருவதாக சொன்னார்கள். ஆனால் தரவில்லை, நாளையும் வரவில்லை என்றால் ஏசியை வாங்கிய வணிக நிறுவனத்தின் வாசலிலேயே உடைத்து விடுவேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.
அதன் பிறகு பொருத்தி கொடுத்தார்கள். இதுகுறித்து வேலூர் மாவட்டத்தில் ஏசி பொருத்தம் பணியில் ஈடுபட்டுள்ள என் உறவினரிடம் கேட்டபோது, ஏசி விற்பனை அதிகரித்துவிட்டதாகவும், இரவு ஒரு மணி வரை ஏசி பொருத்தும் பணியைச் செய்து வருவதாகவும் கூறினார்.
ஒரு சில கம்பெனி ஏசியை வெளி நபர்களை வைத்து கூட பொருத்திக் கொள்ளலாம், ஒரு சில கம்பெனி ஏசிகளை தொடர்புடைய கம்பெனி நபர்கள் தான் பொருத்த முடியும். அவர்கள் தான் சில குறியீடுகளை கொடுத்து ஏசியை ஆன் செய்கிறார்கள். ஆன்லைன் மூலமாக ஏசி ஆர்டர் செய்தால் கூட எட்டு நாட்கள் வரை ஆகிறது. மக்கள் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக அளவுக்கு அதிகமாக ஏசி வாங்குவதால், பொருத்தக்கூடிய பணியாளர்களால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. மக்கள் கடும் அவதி! - Tamil Nadu Weather Report