சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, இன்று காலை 10 மணி அளவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, பெரும்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, தாம்பரம், பல்லாவரம் குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு மணி நேரமாக கன மழை கொட்டி தீர்த்தது.
இதில் குறிப்பாக வேளச்சேரி, மேடவாக்கம் பிரதான சாலை, பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் பேருந்து நிலையம் அருகே கனமழையின் காரணமாக சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதையும் படிங்க:வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
மேலும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 மணி நேரம் பெய்த கன மழை காரணமாக, மேற்கு தாம்பரத்திலிருந்து கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் சுரங்க பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார்கள் மூலம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், தற்போதைய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ள சென்னை வாணியை ஆய்வு மையம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை நவ. 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறைப்படி, இந்த முறை சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த ‘ஃபெங்கல்’ (FENGAL Cyclone) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்