தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் எதிரொலி: கனமழையில் மூழ்கிய நெற்பயிர்கள்! வேதனையில் திருவாரூர் விவசாயிகள்.. - CYCLONE FENGAL

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளதாக திருவாரூர் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மழை நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்
மழை நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 11:32 AM IST

Updated : Nov 30, 2024, 12:25 PM IST

திருவாரூர்:ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் கூத்தாநல்லூர் அருகே உள்ள காசாங்குளம், வாகோட்டை, மஞ்சன வாடி, திருராமேஸ்வரம், தெற்குபடுகை, தென்கோவனூர், வடகோவனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட 20 முதல் 40 நாட்களான சம்பா நெற்பயிர்களில் 1500 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் கனமழையால் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதிகளில் உள்ள விளைச்சலுக்கு காசாங்குளம் பகுதி பாமணி ஆற்றில் இருந்து பாசன நீர் கிடைக்கிறது. மீதமுள்ள பகுதிகளுக்கு வெண்ணாற்றில் இருந்து பாசன நீர் கிடைக்கிறது. இந்த இரு வேறு பகுதிகளுக்கும் வடிகாலாக கோரையாறு உள்ளது.

விவசாயி கிரி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் இது குறித்து பேசிய விவசாயி கிரி, “இந்த ஆண்டின் விளைச்சலுக்காக ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 செலவு செய்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்துள்ள மழையால் நெல் பயிர்கள் அழுகி வருகிறது. விளைநிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பதற்கு வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை.

இதையும் படிங்க:புயல் எப்போது ஓயும்; மழை எப்போது விடும்! ரமணன் கூறிய புதிய தகவல் என்ன?

மேலும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்றார்.

Last Updated : Nov 30, 2024, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details