விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றுள்ளது. அதற்கான மேடை அமைக்கும் பணி மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி. சாலை பகுதியானது நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநாட்டு பணிகள் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வரும் 27 ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை திட்டமிட்டபடி முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுகிறது.
முன்னதாக, மாநாட்டை கடந்த செப்டம்பர் மாதமே நடத்த திட்டமிட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைத்தும், புதிய கால அவகாசம் இல்லாததால் மாநாடு தேதி தள்ளி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கனமழை காரணமாக மாநாட்டு ஏற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.