தஞ்சாவூர்:தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், அன்னை மணியம்மையாரின் 105-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மணியம்மை:அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “மணியம்மையார் தன்னுடைய முழுச் சொத்தையும் அறக்கட்டளைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கிய பெரியாருக்கும் தொண்டு செய்து, இயக்கத்தையும் வளர்த்தார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி வந்திருக்கிறது என்றால் அதிலே மணியம்மையார், பெரியாருக்குப் பிறகு அந்தப் பணியைச் செய்து, மிகப்பெரிய அளவிற்கு வந்துள்ளார் எனலாம்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: இந்தியாவையே கலக்க வைக்கக்கூடிய ராவண லீலா என்ற பெரிய போராட்டத்தையும் நடத்திக் காட்டி, அதற்காகச் சிறை சென்றவர் மணியம்மையார். அவருடைய இந்த பிறந்தநாளில் விரும்பிய ஒரு சமுதாயம் காண வேண்டுமானால் ஆதிக்கமற்ற சமுதாயத்தைக் காண வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும், சாதி, தீண்டாமை, பெண்ணடிமை இவற்றை நீக்கி ஒரு சமூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் வருகின்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
அந்த லட்சியத்தை அடைவதற்கு அதுவே ஒரு சிறந்த வழியாகும். தேர்தல் ஆணையர்கள் பதவி நீட்டிப்பு என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை, மாறாகத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதற்கு அரசியல் சட்டத்தில் உள்ள விதிப்படி குறிப்பிட்ட காலம் பதவியில் இருக்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். ஆகவே இந்த நியமனங்கள் சரியில்லை. புதிய நியமனங்கள் வரவேண்டும் என்று சொன்னதை மத்திய அரசு ஏற்கவில்லை.
மிகப்பெரிய சூழ்ச்சி களம்:மாறாக அவர்கள் கருதியபடி உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் நியமனக்குழுவில் இடம்பெற வேண்டுமென்று சொன்ன போது அதை ஏற்காது, மீண்டும் அந்த பழைய சட்டத்தில் தங்களுடைய பிரதிநிதியே அமைச்சரவையிலிருந்து இருப்பார்கள் என்று ஆக்கியிருக்கிறார்கள். தேர்தல் பத்திரம் என்பது இன்றைக்கு மிகப்பெரிய சூழ்ச்சி களம். அரசியலிலே தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ் செய்தது போலவே இதையும் தங்களது வயப்படுத்தி இருக்கிறார்கள்.