சென்னை: நிலப் பிரச்சனை தொடர்பாகச் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், இன்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினீயர் முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மரண தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே போல் பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களைச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.
இதேபோல், 7 பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்குகள் இறுதி விசாரணைக்காக நீதிபதிகள் எம். எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோரின் அமர்விற்கு வந்தது.
அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விசாரணை நீதிமன்றம் முறையாக தங்களின் வாதங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் நம்ப தகுந்த சாட்சிகள் எதுவும் இந்த வழக்கில் அரசு தரப்பில் நிரூபிக்கவில்லை. கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் முறையாக நிரூபிக்கவில்லை. இதனைக் கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை முழுமையாகக் கவனத்தில் கொண்டு தண்டனை விதித்துள்ளது. எனவே விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:சந்திரமுகி, தர்பார் உள்ளிட்ட படங்களுக்குத் தெலுங்கு டப்பிங் வசனம் எழுதிய ஸ்ரீராமகிருஷ்ணா காலமானார்.. - Dubbing Writer Sri Ramakrishna