சென்னை:கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் சராசரி வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களின் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் எனவும், அதற்கு சிகிச்சை அளிக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவமனைக்கும், செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இதனால் வருகின்ற நாட்களில் உயர் வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு, சுய நினைவை இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் உயர் வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சில நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை எதை செய்ய வேண்டும் மற்றும் எதையெல்லாம் செய்யக்கூடாது என சில அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.
உயர் வெப்ப நிலையிலிருந்து பாதுகாக்க செய்ய வேண்டியவை:
- தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடித்து நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வெளியிடங்களுக்கு செல்லும்போது பாட்டிலில் தண்ணீரை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
- ஓஆர்எஸ் (ORS) உப்பு கரைசலை பருகலாம். எலுமிச்சை, பழச்சாறு, தர்பூசணி அல்லது முலாம் பழச்சாறுகள், மோர் போன்றவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரிக்காய்களை எடுத்துக் கொள்ளவும்.
- பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும்.
- வெயிலில் செல்லும்போது குடை பிடித்துச் செல்ல வேண்டும் அல்லது தொப்பி போன்றவற்றை அணிந்து தலை மற்றும் முகத்தில் வெயில் நேரடியாக படுவதை குறைக்க வேண்டும்.
- வெயிலில் செல்லும்போது கட்டாயம் காலணி அணிந்து செல்ல வேண்டும்.
- வெயில் நேரங்களில் முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
- வெயில் நேரங்களில் குளிர்ந்த காற்றோட்டமான இடங்களில் இருக்க வேண்டும். முடிந்த வரை கீழ் தளங்களில் இருங்கள்.
- பகல் நேரங்களில் வீடுகளின் ஜன்னல்களை மூடி வைக்கவும், பின் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்து காற்று வீட்டிற்குள் வரும்படி செய்யவும்.
- குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், திறந்த வெளியில் வேலை பார்ப்பவர்கள், இதய நோய் உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வெப்ப அலைகளின் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, மேற்கண்ட நபர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள், நோய்வாய்பட்டவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்