சென்னை:தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், "தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டு அவையும் செயல்பட்டு வருகிறது. அதில் முதலாம் ஆண்டு, 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டிற்கு தேவையான மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பணியிடங்கள் உருவாக்கம்: இறுதி ஆண்டில் நியமனம் செய்ய வேண்டிய மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவர் போன்றவற்றுக்கு இன்னும் 1200 மருத்துவப் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட வேண்டும். 11 மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்களுக்கான இடத்திற்கு அனுமதி பெறப்பட்டது.அவற்றில் 6 மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். அதற்கான இணை பேராசிரியர், துணை பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்கனவே 2000 பணியிடங்கள் காலியாக உள்ளது.மேலும், புதியதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின் படி 1200 பணியிடங்கள் உருவாக்கப்படு, மொத்தமாக 3200 பணியிடங்களில் ஆட்கள் நியமிக்க வேண்டியதிருக்கும். இந்த பணியிடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடமே தவிர, நோயாளிகள் எண்ணிக்கையின் அடிப்படையிலோ, சேவையின் அடிப்படையிலோ அல்ல.
சிரமம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள்: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநரகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் குறைந்தது 10 ஆயிரம் மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கினால் தான் மருத்துவர்களை துன்புறுத்தாத சுகாதாரத்துறை என நாம் கருத முடியும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 20,000 மருத்துவப் பணியிடங்களில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2500 இடங்களும், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையில் 1200 முதல் 1400 இடங்களும் காலியாக உள்ளது. அரசுப் பணிசாரமல் முதுகலை மருத்துவம் படித்த மாணவர்கள் அக்டோபரில் ஒரு பிரிவும், டிசம்பரில் ஒரு பிரிவும் வெளியில் செல்வார்கள்.
இதுமட்டும் அல்லாது, வேலைப்பளுவின் காரணமாக தொடர்ந்து விடுமுறையில் இருப்பவர்களும் உள்ளனர். பொது சுகாதாரத்துறையில் 2000 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனையும் சேர்த்தால் 20 ஆயிரம் பணியிடங்களில் 7 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவ்வாறு பணியிடங்கள் காலியாக இருக்கும் போது பணி செய்ய சிரமம் இருந்தாலும் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
திமுக ஆட்சியை விரும்பிய மருத்துவர்கள்: கருணாநிதி ஆட்சியின் போது போடப்பட்ட அரசாணை 354-ஐ கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்றுவதாக திமுக சார்பில் உறுதியாக கூறினார்கள். அதனால் திமுக ஆட்சி வருவதற்கு மருத்துவர்கள் விரும்பினர்.ஆனால், வெட்கமான விஷயம் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6500 மருத்துவப் பணியிடங்களை உருவாக்கினர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், புதியதாக கட்டப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு, கடந்த ஓராண்டாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் இல்லை என்பதால் திறக்காமல் மூடப்பட்டே இருக்கிறது.
40 சதவீதம் செவிலியர்கள் 100 சதவீதம் பணி: சுகாதாரத்துறையில் கட்டிடங்கள் கட்டுவதையும், அதற்கான உபகரணங்கள் வாங்குவதையும் செய்துவிடுகின்றனர். ஆனால், அதனை பயன்படுத்த வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடத்தை எந்த ஆட்சியாளர்களும் செய்வதில்லை. யார் ஆட்சியிலிருந்தாலும் குடிமைப்பணி அதிகாரிகள் மருத்துவர்களிடம் அதிக வேலை வாங்குவதை ஒரு தொடர்கதையாக வைத்துள்ளனர். மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் உள்ள 16,200 செவிலியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் காலியாக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவின் படி, மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுக்கான படுக்கை எண்ணிக்கையின் அடிப்படையில் செவிலியர் பணியிடங்கள் கொண்டு வர வேண்டும் என்ற விதியின் படி சுமார் 33 ஆயிரம் செவிலியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்.