தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மருந்துகளின் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும்" மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!

"முதுகலை பட்ட படிப்பில் அரசு சாரா மருத்துவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்திட வேண்டும், மருந்துகளின் விலையை 50 சதவீதம் உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும்" என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 5:13 PM IST

சென்னை:"முதுகலை பட்ட படிப்பில் அரசு சாரா மருத்துவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்திட வேண்டும், மருந்துகளின் விலையை 50 சதவீதம் உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும்" என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்தரநாத், செயலாளர் சாந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,"முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள் ,அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கு சமவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6000 முதல் 7000 அரசுப்பணியில் இல்லாத மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சிபெறுகின்றனர். ஆனால் ஆண்டு தோறும் அரசு மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடை பெறுவதில்லை.

இதனால், முதுநிலை மருத்துவ படிப்பிற்கு(MD, MS) போட்டியிடும் அரசு சாரா மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு அரசுப் பணியில் உள்ள 1500 முதல் 2000 மருத்துவர்கள் விண்ணப்பிக்கின்றனர். தமிழ்நாட்டில் முதுநிலை (MD, MS) மருத்துவப் படிப்பில், தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 1600 இடங்கள் உள்ளன.

டாக்டர்கள் சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாடு அரசால், அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடாக (service quota) 50 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. முது நிலை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு திணிக்கப்படுவதற்கு முன்பு, அரசு மற்றும் அரசு சாரா மருத்துவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் , அவர்கள் படித்து முடித்த ஆண்டுகளை கணக்கிட்டு அனுபவ மதிப்பெண் (experience marks ) வழங்கி அந்த மதிப்பெண்ணுடன் நுழைவுத்தேர்வு மதிப்பெண் கூடுதலாக வழங்கும் முறை இருந்தது.

இதையும் படிங்க:"1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் "-அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

ஆனால் முதுநிலை மருத்துவ நீட்தேர்வு வந்த பின்,அரசு சாரா மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனுபவ மதிப்பெண் ரத்தாகிவிட்டது. இது அவர்களுக்கு பாதிப்பை உருவாக்குகிறது. தமிழகத்திலுள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் , அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு (service quota) மற்றும் ஊக்க மதிப்பெண்(Incentive Marks) வழங்கும் முறை தொடர வேண்டும். அதே வேளையில், அரசு சாரா மருத்துவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அனுபவ மதிப்பெண் (experience mark) வழங்கப்பட வேண்டும்" என்று கூறினர்.

தொடர்ந்து பேசிய டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்தரநாத், "முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுடைய ஊக்க மதிப்பெண்ணை , 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டில் போட்டியிடும் போது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதியுள்ள பொதுப் போட்டி இடங்களுக்கு (open quota) ஊக்க மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

மத்திய அரசு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை 50 சதவீதம் உயர்த்தி உள்ளதை திரும்பப்பெற வேண்டும். காசநோய், ஆஸ்துமா போன்ற ஜெனரிக் மருந்துகளின் விலையையும் உயர்த்தி உள்ளனர். எனவே அதனை குறைத்து மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்ய வேண்டும்.

மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதம், மற்றும் கால முறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் கடந்த ஆட்சியில் நடத்திய போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் போராட்டக் களத்திற்கு வந்து திமுக ஆட்சி அமைந்தால் ஊதியப்பிரச்சனை சரிசெய்யப்படும் என கூறினார்.

ஆனால் மருத்துவர்களின் ஊதியப் பிரச்சனை சரிசெய்யப்படவில்லை. 70 வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்படும் என்பது முழுமையான பலனளிக்காது. சிகிச்சைகளும்,பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசம் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும்,"என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details