தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பாஜக அரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்" - மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Doctors Association: நவீன அறிவியல் மருத்துவத்தை பாதுகாத்திட, மருத்துவத் துறையில் மதச்சார்பின்மையை பாதுகாத்திட பாஜக அரசை ஆட்சியை விட்டு அகற்றிட வேண்டும். இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 4:34 PM IST

சென்னை:நவீன அறிவியல் மருத்துவத்தை பாதுகாத்திட, மருத்துவத் துறையில் மதச்சார்பின்மையை பாதுகாத்திட பாஜக அரசை ஆட்சியை விட்டு அகற்றிட வேண்டும். இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து இச்சங்கங்களின் சார்பில் திருச்சியில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அரசின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை கார்ப்பரேட் மயமாக்கி வருகிறது. தனியார் மயமாக்குகிறது. பொது சுகாதாரத்துறையை வலுவிழக்கச் செய்கிறது. அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு வாரி வழங்குகிறது. மருத்துக் கல்வியும், மருத்துவ சிகிச்சைகளும் ஏழைகளுக்கு எட்டாக் கனிகளாக மாறிவிட்டன.

நவீன அறிவியல் மருத்துவத்தில், மூடநம்பிக்கைகளை புகுத்துகிறது. ஜோதிட மருத்துவம், ஆன்மீக மருத்துவம் என அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளை நவீன அறிவியல் மருத்துவத்தோடு இணைக்க முயல்கிறது. கி.பி 2030-ல் “ஒரே தேசம் ஒரே மருத்துவமுறை” (One Nation ,One Medical System) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த மோடி அரசு முயல்கிறது. அதாவது, ஒரே மருத்துவ முறை என்ற பெயரில், நவீன அறிவியல் மருத்துவத்திற்கும், அறிவியல் சிந்தனைப் போக்கிற்கும், அறிவியல் ரீதியான உலகப் பார்வைக்கும், சாவு மணி அடிக்க முயல்கிறது.

அத்தகைய நோக்குடன், பொதுவான அடிப்படை மருத்துவப் பாடத்திட்டம் (Common Foundation Medical Course), ஒருங்கிணைந்த மருத்துவ முறை (Integrated Medicine), கலப்பு மருத்துவம் (Mixopathy ), ஆன்மீக மருத்துவம் (Spiritual Medicine), ஜோதிட மருத்துவம் (astrological medicine) போன்றவற்றை கொண்டுவர முயல்கிறது.

தடுப்பூசி திட்டத்திற்கு ‘இந்திர தனுஷ்’, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’, மருத்துவத் திட்டத்திற்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ என பெயர்களை மாற்ற முயல்வது, இந்தி - சமஸ்கிருத திணிப்பு மற்றும் இந்துத்துவா கருத்தியல் போன்றவற்றை மருத்துவக் கல்வியிலும், மருத்துவ சேவையிலும் திணிப்பதற்கான உதாரணங்களாகும். இது, நவீன அறிவியல் மருத்துவத்தை காவி மயமாக்கும் முயற்சியாகும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பிரதமர் மருத்துவக் காப்பீடு (PM Medical Insurance ) திட்டத்தில் மிகப் பெரிய ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அது, ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் இலவச சிகிச்சை பெறுவதை தடுத்துள்ளது. அதே போன்று,கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம், கரோனா பரிசோதனை கட்டண நிர்ணயம், பிஎம் கேர் நிதி (PM Care Fund), வெண்டிலேட்டர் கொள்முதல் போன்றவற்றிலும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன.

நெக்ஸ்ட்(NExT) என்ற தேசிய தகுதித்தேர்வை மருத்துவப் படிப்பில் திணிக்க முயல்கிறது. நீட் தேர்வில் இருந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெற்றாக வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன், தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், நேர்மையான முறையில் இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்க, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி அளித்துள்ளன. ஏழை மாணவர்களின் கல்வி, விடுதி, உணவு , கலந்தாய்வு , விண்ணப்ப மற்றும் அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்றிட வேண்டும். வேலைக்குச் சென்ற பிறகு, கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக் கடன்களை வழங்கிட வேண்டும்.

மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி அளித்துள்ளன. தனியார் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுத்திட வேண்டும். மருத்துவப் படிப்புகளில் நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தனி இட ஒதுக்கீட்டை 7.5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை வழங்கிட வேண்டும்.

ஏழை மாணவர்களுக்கு, வட்டாரம் தோறும் இலவச உறைவிட மற்றும் உணவு வசதியுடன் கூடிய நீட் மற்றும் இதர கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுக பயிற்சி மையங்களை உருவாக்கிட வேண்டும். மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, அந்நிறுவனத்தின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டினருக்கு 65% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நிரந்தர அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். ஆஷா" (ASHA) தொழிலாளர்களுக்கு, ஊக்கத்தொகையோடு மாத ஊதியமாக ரூ 26,000 வழங்கிட வேண்டும். ஆஷா, அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவை கார்ப்பரேட் மயமாவதை, தனியார் மயமாவதை, வணிகமயமாவதை தடுத்திட வேண்டும். அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. முதுநிலை மருத்துவப் படிப்பின் பொழுது, மாணவர்கள் மூன்று மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை படிக்கும் மாணாக்கர்களின் ( FMGs) நலன்களை பாதுகாத்திட வேண்டும். மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரான,ஊழலும் ஏதேச்சதிகாரமும் மிகுந்த,தேசிய மருத்துவ ஆணையம்(NMC) மாற்றி அமைக்கப்பட வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அவ்வாறு நடத்தப்படும் என காங்கிரஸ், திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கும் வகையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றப்பட வேண்டும். மோடி அரசின், தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy)யை திரும்பப் பெற வேண்டும். பிறக்கும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தையின் மதங்களை தனித்தனியே பதிவு செய்ய வேண்டுமென பாஜக அரசு மதவாத அரசியல் உள்நோக்கத்தோடு ஆணையை தற்போது பிறப்பித்துள்ளது. இது திரும்பப் பெறப்பட வேண்டும்.

மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களை பேணக்கூடிய, நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சட்டம் மற்றும் நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில், மக்கள் நலன் சார்ந்த மாற்று கொள்கையுடன் கூடிய அரசை இந்தியாவில் உருவாக்க வேண்டும். அதற்கு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள "இந்தியா கூட்டணியை " தமிழ்நாட்டு மக்களும் மருத்துவர்களும், மருத்துவத்துறை பணியாளர்களும் நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்'.. திமுக விளம்பரம் தடை விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடிய திமுக! - Dmk Advertisement Issue

ABOUT THE AUTHOR

...view details