சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு கட்சிகளும் தங்களது பணிகளை முடுக்கி விட்டு உள்ளன. இதன்படி, கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் பரபரப்புடன் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை, தலைமை அலுவலகத்தில் இருந்து ஒருங்கிணைப்பதற்காக வார் ரூம் உருவாக்கி, அதற்கான பொறுப்பாளர்களையும் நியமித்து உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்படி, திமுகவின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி மேலாண்மை மற்றும் பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை மேற்கொள்வார்.
ஊடக விவாதக்குழு மேலாண்மை மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரை மேலாண்மையை எஸ்.ஆஸ்டின் மற்றும் சட்டக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றை என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மேற்கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தேர்தல் வழக்குகள் - நீதிமன்றக் குழு, திமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், தேர்தல் ஆணையம் - கோரிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகள், காவல்துறை - புகார்கள் மற்றும் பாதுகாப்பு, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பிரிவுகளிலும் வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், திமுக தலைமை அலுவலக வார் ரூம் மட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது. இதன்படி, திமுக மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சட்டமன்றத் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் மற்றும் காவல் நிலைய எல்லைக்கு மூன்று வழக்கறிஞர்கள் கொண்ட ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றையும் அமைத்து உத்தரவிட்ட திமுக, அதன் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:“வடக்கு - தெற்கு பிரச்னை என்பது பிய்ந்து போன செருப்பு போன்றது” - அண்ணாமலை காட்டம்!