நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன.இதில் 22 இடங்களிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் உள்ளனர். இதைத் தவிர்த்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் சுயேச்சை 1, அதிமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சியின் தலைவர் பதவியில் இருந்து வந்த ஆறாவது வார்டு கவுன்சிலர் ஷீலா கேத்தரின், மாரடைப்பு காரணமாக கடந்த பிப்.02 ஆம் தேதி காலமானார். திமுக பொதுக் குழு உறுப்பினராக இருந்து வந்த இவர், திமுக சார்பில் குன்னூர் நகர் மன்ற தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவை தொடர்ந்து நகராட்சியில் தலைவர் பதவி காலியாக இருந்தது. இருப்பினும் கடந்த 6 மாத தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் இன்று தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.
இதற்கு முன்னதாக 16வது வார்டு திமுக கவுன்சிலர் சுசீலா தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார் சுசீலா.
அப்போது திமுக கவுன்சிலர் மற்றும் கூட்டணி கட்சிட்யை சேர்ந்த கவுன்சிலர்களும் சுசிலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்டச் செயலாளரும் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து இன்று குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இதில் சுசிலாவை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டர். இதனையடுத்து நகராட்சி ஆணையர் சசிகலா, வெற்றி பெற்ற சுசிலாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"இந்து கடவுள் குறித்து அவதூறு பரப்புவதா?" - இயக்குநர் பா.ரஞ்சித் மீது பரபரப்பு புகார்!