சென்னை : 'டிடி தமிழ்' தொலைக்காட்சியின் பொன் விழாவும், இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் சென்னை சிவானந்தா சாலையில் இருக்கக்கூடிய சென்னை தொலைக்காட்சியில் (DD Tamil) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
முன்னதாக, இந்த விழாவில் ஆளுநர் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக மாணவரணி செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னின்று நடத்தி கண்டன உரைகளை எழுப்பினார்.
மாணவரணி செயலாளர் எழிலரசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிடி தமிழ் தொலைக்காட்சியில் பொன்விழா நிகழ்ச்சியோடு, இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் நடத்த முயல்கின்ற பாஜக அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.
இந்தியை எல்லா வகையிலும் திணிக்க முயற்சி செய்யும் பாஜக அரசை ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது திமுகவும், தமிழக மக்களும், அறிஞர்களும் போராடி எதிர்த்து வருகின்றனர். இந்தி மாத கொண்டாட்டங்களில் நிறைவு விழாவிற்கு ஆளுநர் கலந்து கொள்கிறார். அதற்காகத்தான் நாங்கள் தற்போது ஒன்று கூடி உள்ளோம்.
இதையும் படிங்க :ஆளுநரா, ஆரியநரா? தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
இந்தி விழாவினை எப்படி நடத்தலாம் என்பதுதான் எங்கள் கேள்வி. அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழியையும் தேசிய மொழி என்று அறிவிக்கவில்லை. அதற்கான அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை. ஆனால் இந்தியை இந்தியாவின் மொழியாக கொண்டாட நினைக்கிறது பாஜக அரசு.
அரசியலமைப்பு மொழி அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் இந்தி தான் தேசிய மொழி என்ற பிம்பத்தை பாஜக அரசு வெளிப்படுத்துகிறது. வேண்டுமென்றே தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முற்படுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தில் இந்தி விழாவை நடத்த முற்படுகிறார்கள் இது நியாயமா? என்பது தான் எங்கள் முக்கியமான கேள்வி.
இந்தியை மாநில மொழியாக கொண்டிருக்கும் மாநிலத்தில் இந்த விழாவை நடத்தி இருக்கலாம். ஆனால், இந்த விழாவினை தமிழ்நாட்டில் நடத்துகிறார்கள். தமிழ் மொழியை உயிராக நேசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்படி ஒரு விழா நடத்துவது மீண்டும் இந்தி திணிப்பை உறுதி செய்கிறது.
இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, மொழி உரிமைக்கு எதிரானது, பன்முகத் தன்மைக்கு விரோதமானது எனவே தான் இந்த போராட்டத்தை நடத்துகின்றோம். இதை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்