சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்த நிலையில், அதில் உடன்பாடு ஏற்படாததால், தற்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்த வகையில், நேற்று திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு (IUML) ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மதிமுக உடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது.
இந்நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளை காலை 10 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனான முதல் கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 4ஆம் தேதியும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றிருந்தது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி மற்றும் சீட் எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மேலும், திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
கமல்ஹாசன் 29ஆம் தேதி THUG LIFE படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்று விட்டு, மார்ச் 10ஆம் தேதிதான் சென்னை திரும்ப உள்ளார். அதனால் 28ஆம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து, உடன்பாட்டில் கையெழுத்திட்டு விட்டு வெளிநாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே மறைமுக கூட்டணி - டிடிவி தினகரன் விமர்சனம்!