தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை தீ விபத்து: தனியார் விடுதியை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? செல்லூர் ராஜு கேள்வி; அமைச்சர் பிடிஆர் விளக்கம்! - madurai girls hostel fire accident - MADURAI GIRLS HOSTEL FIRE ACCIDENT

Madurai hostel Fire Accident: மதுரையில் தீ விபத்து நிகழ்ந்த தனியார் பெண்கள் விடுதியை இடிக்க மாநகராட்சி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்ததா? என்ற கேள்விக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம், மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய பின், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியகாராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அமைச்சர் பழனிவேல் தியகாராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 6:16 PM IST

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், குரங்கணி கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பரிமளா சவத்திரி மற்றும் பேரிலோவன்பட்டியை சேர்ந்த சரண்யா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். விடுதியில் இருந்த மாணவிகள், தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு தற்போது தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, “ மகளிர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் மூச்சுத்திணறல், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை. விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு மாற்று விடுதியில் தற்காலிகமாக தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி - விடுதி உரிமையாளர் கைது!

​தலைமைச் செயலாளருடன் பேசி நடவடிக்கை:தமிழ்நாடு முழுவதும் முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் விடுதிகள் தொடர்பாக ஆய்வு செய்து தலைமைச் செயலாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவம் எப்படி நடந்தது? என்னென்ன விதிமுறை மீறல்கள் இருந்தன? மற்றும் அவற்றை எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.

விடுதிகளுக்கு புதிய விதிமுறைகள்: இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு விடுதிகளை நடத்துவது தொடர்பாக விதிமுறைகள் கொண்டு வரப்படும். விடுதி இருந்த கட்டிடத்தை இடிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக எனக்கு தகவல் வந்தது. இது குறித்து முழுமையான தகவல் கிடைக்காமல் அரை குறை தகவலை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. முழுத் தகவலும் வந்த பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” இவ்வாறு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

'மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை':இதனையடுத்து, தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட மாணவிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “மாநகராட்சி நிர்வாகம் இந்த விடுதிக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அதன் பிறகு மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விடுதியின் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. விபத்தில் பரிதாபமாக இரண்டு பெண்கள் உயிர் இழந்துள்ளனர். மூன்று பேர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் அரசாங்கம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இனியும் மதுரை மாநகராட்சி மந்த நிலையில் இல்லாமல் உடனடியாக இது போல் உள்ள கட்டிடங்களை தொடர்ந்து ஆய்வு செய்து அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details