சென்னை: திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ், பெரியார், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 'ரத்து செய், ரத்து செய் நீட் என்னும் அநீதியை ரத்து செய்', #ban neet என்ற பதாகைகளை கையில் ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "இந்த தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நீட் அகில இந்திய பிரச்னையாக மாறியுள்ளது. மக்களவையில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பிய நேரத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சபாநாயகர் கூறினார்.
ஆனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை முடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்ல பயந்து கொண்டுதான் ஓடிவிட்டார் என்று எங்களைப் போன்றவர்களுக்கு எண்ண தோன்றுகிறது.
உச்ச நீதிமன்றம் இந்த மோசடி ஊழலை பார்த்துக் கொண்டிருக்கிறது; நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.