தமிழ்நாடு

tamil nadu

"அம்மாவே போய் சேந்துருச்சு..அப்புறம் என்ன அம்மா உணவகம்?" - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு! - rs bharathi controversial speech

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், அம்மாவே போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்? என்றும், வீணாய்போன உணவை ஜெயலலிதா அரசு அம்மா உணவகத்தில் பரிமாறியது எனவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர்,"ஆலந்தூர் அம்மா உணவகம் அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அம்மாவே (ஜெயலலிதா) போய் சேந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்ட எடப்பாடி கும்பல். ஏதோ150 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அம்மா உணவகத்தையெல்லாம் திமுக மூடிவிட்டது என்பது போல் பேசி வருகிறார்.

வீணாய்போன உணவை ஜெயலலிதா அரசு அம்மா உணவகத்தில் பரிமாறியது என்று குற்றம் சாட்டியதுடன் அம்மா உணவகத்தில் இரவில் பரிமாறப்படும் சப்பாத்தி குருமாவை இங்கிருக்கும் பீகார் உத்தரப்பிரதேசக்காரன்தான் மொத்தமாக சாப்பிடுறான். நம்ம வரிப்பணத்தை செலவு செய்து அவனுக்கு சாப்பாடு போடுகிறோம்.

ஆர்.எஸ்.பாரதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மகாத்மா காந்தியின் ஆட்சி என கூறினார். திமுக தொண்டர்கள் வட்டச் செயலாளர் மீது குறை இருந்தால் பகுதி செயலாளரிடம் கூறுங்கள், பகுதி செயலாளர் மீது குறை இருந்தால் மாவட்டச் செயலாளரிடம் புகார் கூறுங்கள், மாவட்டச் செயலாளர்கள் மீதோ, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதோ குறை இருந்தால் நேரடியாக தலைமைக் கழகத்திற்கு வந்து என்னிடம் புகார் தெரிவியுங்கள், எந்த நேரத்தில் யார் வந்து புகார் சொன்னாலும் கேட்பதற்கு நான் தயாராக உள்ளேன். அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க திமுக தலைமை தயங்காது" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஒன்றிணைவைத் தடுக்கவே எஸ்.பி வேலுமணி, வைத்தியலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போட்டுள்ளதாக ஓபிஎஸ் கருத்துக்கு, அதிமுக ஒன்றாக இருந்தாலும், இல்லையென்றாலும் எங்களுக்கு ஒன்றும் இல்லை. ஒன்றாக இருந்த அதிமுகவையே வென்று உள்ளோம்.

அதிமுக குறித்து கடுகளவு கவலையும் எங்களுக்கு இல்லை. அடுத்த வழக்கு ஓபிஎஸ் மீது வரப்போகிறது என்பதால் அஞ்சுகொண்டு முந்திகொள்கிறார் என நினைக்கின்றேன். ஊழல் செய்தவர்கள் மீது வழக்கு வரும். ஊழல் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் சென்று நிரூபிக்க வேண்டும். அதைவிட்டு புலம்பக்கூடாது.

அதிமுக இப்போது பலவீனம் ஆகிவிட்டனர். திமுக கட்சி பவள விழா கொண்டாடுகிறது. 75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. திமுகவிற்கு இது மிகப்பெரிய நிகழ்ச்சி. எங்கள் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகவில்லை" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details