சென்னை:சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தான் திருடி பிறரை நம்பாள்' என்ற பழமொழி போல உள்ளது அதிமுக புறக்கணிப்பு, அதிமுக ஆட்சியில் செய்ததை இன்று மக்கள் மறந்ததாக நினைக்கிறார்கள் என விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை குறித்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தல் தான் இது எல்லாம். எடப்பாடிக்கு தெரிய வாய்ப்பில்லை அப்போது அவர் எங்கே இருந்தார் என்பது ஊருக்கு தெரியும் அந்த கட்சிக்காரர்களுக்கும் தெரியும். இந்தியாவில் பூத் கேப்சரிங் என்ற ஒரு விஷயம் தமிழ்நாட்டில் அப்போது தெரியாமல் இருந்தது ஆனால் அப்போது தமிழ்நாட்டில் பூத் கேப்ச்சரிங்கை அரங்கேற்றியது அதிமுக தான், அது ஜெயலலிதா தலைமையில் நடந்தது.
தேர்தல் ஆணையம் இருக்கும்பொழுது ஏன் அதிமுக பயப்படுகிறது தேர்தல் ஆணையம் யார் கையில் இருக்கிறது என்பது இந்திய மக்களுக்கு தெரியும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது. ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு. ஆனால் அதிமுக எப்படியாவது பாஜகவுடன் செல்ல வேண்டும் என்பதற்காக இதை ஒரு சாக்காக வைத்து சொல்கிறார்கள்.
அதிமுக இன்னும் தோல்வியடைவார்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் வாங்கவில்லை. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் என்ன வாகும். 2001 ல் ஜெயலலிதா எதிராக டான்சி வழக்கில் நான் மேல்முறையீடு செய்ததன் காரணமாக என்னை தோற்கடிக்க அதிமுக சதி செய்தது. வேடிக்கையே 2000 வாக்குகள் உள்ள தொகுதியில் 2300 வாக்குகள் போடப்பட்டிருந்தது. 20 வாக்குச்சாவடிகளில் வாக்குக்கு அதிகமான வாக்கு பதிவிட்டு பூத் கேப்சரிங் செய்தவர்கள் அதிமுகவினர்.
ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என்றால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் வாக்களிக்கக்கூடாது. நாங்களும் கணக்கெடுக்க போகிறோம் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் யார் யார் வாக்களிக்க போகிறார்கள் என்று. அதிமுக கிளைக் கழக செயலாளர்கள் கவுன்சிலர்கள் ஓட்டு போட்டார்கள் என்றால் அவர்கள் அனைவரும் எடப்பாடியை புறக்கணித்து விட்டார்கள் என்று அர்த்தம்" என்றார்.