தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று திமுக முப்பெரும் விழா.. கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு! - DMK Mupperum Vizha - DMK MUPPERUM VIZHA

DMK Mupperum Vizha: கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

MK Stalin
முக ஸ்டாலின் (Credits - DMK 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 6:52 AM IST

சென்னை: நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 21 இடங்கள், கொமதேக உதயசூரியன் சின்னத்தில் ஒரு இடம் என 22 இடங்களில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இதனையடுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த ஜூன் 8ஆம் தேதி மாலை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.

தொடர்ந்து, இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, “நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்று, கலைஞர் காலடியில் காணிக்கை ஆக்குவோம்’ என்று திமுக தலைவர் உறுதியேற்றார். அந்த உறுதியைச் செயல்படுத்திக் காட்டி விட்டார். அதன்படி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா - ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வருகிற ஜூன் 14ஆம் தேதியன்று கோவையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “திமுக முப்பெரும் விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன்15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது.

திமுக தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்து கட்சி மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார். இதற்காக கோவையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த திமுக முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ செயலாளர் முத்தரசன், சிபிஐ(எம்) செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க:கோவையில் திமுக முப்பெரும் விழா.. கொங்கு மண்டலத்தில் ஸ்டாலினின் அடுத்தகட்ட திட்டம்?

ABOUT THE AUTHOR

...view details