சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், தனது X வலைத்தளப் பதிவில், "மார்ச் -14, 2024 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமானது, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களின் விவரங்களைச் சேகரிக்க, ஆளுநர் ராஜ்பவன் அலுவலகத்திலிருந்து வாய்மொழி அறிவுறுத்தல்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளின் விவரங்களை Excel வடிவத்தில், ஆளுநர் செயலகமான ஆளுநர் மாளிகைக்கு 2024 மார்ச் 19ஆம் தேதிக்குள், குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கல்லூரியின் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த அறிவுறுத்தலானது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற தகவல்கள் ஏன் கோரப்பட்டன என்பது குறித்து மாணவர் சமூகத்திற்கும் - மக்களுக்கும் ஆளுநர் அலுவலகம் பதிலளிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் கேட்கப்பட்டதன் நோக்கம் என்ன?
தேர்தலுக்காக மாணவர்கள் குறிவைக்கப்படுகின்றனரா? யாருடைய உத்தரவின் பேரில் இந்த விவரங்கள் கோரப்பட்டன? நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசியல் செய்ய ஆளுநர் பதவிகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவதாகவும், அவர்களின் கருத்தியலை ஊக்குவிக்கும் ஒரே நோக்கத்துடன் இருப்பதாகவும் பல மாநிலங்கள் புகார் தெரிவித்திருக்கின்றன.
மாணவர்களின் மனதில் தேவையற்ற செல்வாக்கைச் செலுத்த ஆளுநர் அலுவலகத்தின் நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்துவது தேர்தல் குற்றமாகும். எனவே, தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து விதிமுறைகளையும் மீறிய தமிழக ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவர் அறிக்கை கோர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் எம்எல்சி கவிதா கைது!