திருச்சி:மதுரையில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்ட ரயில் திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு மதியம் 2.45 மணிக்கு வந்தடைந்தது. திருச்சி ரயில் நிலையத்தில் திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் சிவா, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தென்னக ரயில்வே மண்டல மேலாளர் அன்பழகன் மற்றும் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருவிற்கு இரவு 9.30 மணிக்கு சென்றடைந்தது. இவ்வாறு மதுரையிலிருந்து வந்த வந்தே பாரத் ரயிலுக்கு, திருச்சி ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அதேபோல் 157 மாணவ, மாணவிகள் வந்தே பாரத ரயிலில் கரூர் வரை அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், “பெங்களூருக்கு திருச்சியில் இருந்து பகல் நேரத்தில் ரயில் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
சாதாரண ரயிலுக்கு பதிலாக தற்போது வந்தே பாரத் கொடுத்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. இவை விரைந்து செல்லக்கூடிய ரயிலாக இருக்கும். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏற்கனவே ஒன்று இருந்தது. மற்றொரு வந்தே பாரத் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.