சென்னை:சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் "PERIYAR VISION-(Everything for everyone)" என்ற OTT தளத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, திரைப்பட நடிகர் சத்யராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திமுக எம்பி கனிமொழி அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, "பராசக்தியில் வெட்டப்பட்ட வசனங்கள் அளவில்லாதவை. குறிப்பாக 'அன்பே வா' படத்தில் வரும் உதயசூரியனின் பார்வையிலே என்ற வரிகளை புதிய சூரியன் என்று மாற்றப்பட்டது. பெரியார் படத்தை இப்போது வெளியிட்டாலும் பரபரப்பாகும். எங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் தான் நன்றாக இருக்கும். நாங்கள் எதிர்ப்பில் தான் வளருவோம்" எனக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கனிமொழி, "Liberty (கருத்துரிமை) இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில், இந்த திடலில் தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது, சிந்தனை உரிமை கிடையாது எந்த libertyயும் கிடையாது.
எல்லாருடைய liberty-க்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும். பெண் என்றால் சமைக்க தெரிய வேண்டும் என்று இப்போதும் உள்ளது. மக்களிடையே இருந்த மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர் பெரியார்.
இப்போது பெரியார் சிலை மேல் காவி சாயம் ஊற்றுகிறார்கள், இவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போதுதான் இந்த தலைமுறைகள் யார் இந்த மனிதன் என்று அறிய முற்படுகிறார்கள். வடமாநிலத்தில் ஒரு போராட்டத்தின் போது கூட பெரியாரின் புகைப்படம் வைக்கப்படுகிறது. இதற்காக பாஜகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பேசினார்.
பின்னர் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, "பெரியார் செய்த அமைதி புரட்சியில் சுயமரியாதை வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார் தன்னை பூரண பகுத்தறிவுவாதி என அடையாளப்படுத்திக் கொண்டார். பெரியாரின் தொலைநோக்கு பார்வை என்னவென்றால், அவரின் கொள்கைகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும்.
எந்த ஊரில் பெரியாரை எதிர்த்தார்களோ அதே ஊரில் இன்றைக்கு அவருக்கு சிலை வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் பெரியார். நம்முடைய சமுதாயத்திற்குப் பெரியார் தேவை. அந்த பெரியாரை ஓடிடி மூலமாக இந்த இளைஞர்கள் கொண்டு வந்துள்ளார்கள்" என தெரிவித்தார்.
கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பு:விழாவினைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி, "இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத்தொகை, ரயில்வே திட்டங்கள் என பல திட்டங்கள் நிலுவையில் உள்ளது. இந்த தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட பிறகு எல்லோருக்குமான நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்" எனக் கூறினார்.
பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "ஒடுக்கப்பட்ட மக்களுடன் தொடர்ந்து போராடி வரும் இயக்கம் திமுக. இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு" என தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா என்ற கேட்டபோது, முதலமைச்சர், கட்சித் தலைவர் எடுக்க வேண்டிய முடிவு" என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:"துணை முதலமைச்சர் பதவி யாருக்குத் தான் வேண்டாம்"- அமைச்சர் துரைமுருகன் கலகலப்பு!