சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், மக்களிடம் நேரில் சென்று பரிந்துரைகளைப் பெற்று வருகின்றனர். அதாவது 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' நாடாளுமன்றத்தில் என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று (பிப்.26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு பரிந்துரைகளை அளித்தனர்.
அதாவது, 2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி தலைமையிலான, 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களுக்குச் சென்று கருத்துக்களைக் கேட்டு வருகின்றனர்.
அப்போது, வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது, மேடையில் பேசிய கனிமொழி, "முதலமைச்சர் அமைத்த தேர்தல் அறிக்கை குழுவில், மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு, மக்களின் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக் கட்டளையிட்டார். அதனடிப்படையில், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அமைப்புகள், விவசாயிகள், தொழிலாளிகள், தொழில் முனைவோர், மகளிர் குழுக்கள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டோம்.