தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நானும் இறுமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - கனிமொழி சவால்! - KANIMOZHI REACT ON VIJAY SPEECH

சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகி உள்ள நிலையில், அதற்கு திமுக எம்பி, அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

விஜய், கனிமொழி எம்.பி
தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 8:07 PM IST

சென்னை :சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழா நேற்று( டிச 6) நடைபெற்றது. நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவின் மேடையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் பேசுகையில், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத, பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை இதுதான்.கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட திருமாவளவன் பங்கேற்க முடியாத அளவிற்கு அவருக்கு கூட்டணி கட்சி சார்ந்து எவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும் அவருடைய மனது முழுக்க முழுக்க இன்றைக்கு இங்குதான் இருக்கும்" என்று பேசினார். இவரின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசு பொருளாகி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசி உள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி: "தேர்தல் வெற்றி என்பது மக்களாகிய உங்களின் கரங்களில் இருக்கிறது என்ற அந்த கட்டுப்பாட்டோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சொல்வது போல் 200 தொகுதிகளிலும் நிச்சயமாக, நானும் இறுமாப்போடு சொல்கிறேன். வெற்றி நிச்சயம்.. வெற்றி நிச்சயம்.." என்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு: திமுக அரசின் திட்டங்களால் கருவறை முதல் கல்லறை வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு திட்டங்களால் சுபிட்சமாக உள்ளது. பெருமழைக்கு பிறகு பாராட்டு மழையில் தான் முதலமைச்சர் நனைந்து கொண்டு சென்றார் என்பதற்கு, திமுக அரசின் சாதனைகளே அதற்கு மாற்றங்களே காரணமாக இருந்தது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200அல்ல234 தொகுதிகளையும் சட்டமன்றத்தில் திமுக கைப்பற்றும்.

இதையும் படிங்க :"கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" - அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு!

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக திமுகவிற்கு எப்போதெல்லாம் அவதூறுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன் 100 கி.மீ வேகத்தில் திமுக தொண்டன் பயணிப்பான். மீண்டும் 2026ம் ஆண்டு தமிழக முதலமைச்சரை அரியணையில் ஏற்றும் வரை எங்களுடைய பயணம் வேகம் குறையாது" என்று கொளத்தூரில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி:"திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தப்பு கணக்கு போடும் பழக்கம் கிடையாது. கூட்டல், கழித்தல் விஜய்க்கு தெரியாமல் இருக்கலாம். சினிமா துறையில் வேண்டுமென்றால் மிகப்பெரிய ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் அளிக்கும் எல்லா பிளஸ்சும் இருக்கக்கூடிய திரைப்படம் தோல்வியடையும். ஆனால் அரசியலில் எந்த பிளஸ்-ம் மைனஸ் ஆக வாய்ப்பு கிடையாது. பிளஸ்-ஐ, மைனஸ் ஆக்கும் வல்லமை விஜய்க்கும் கிடையாது.

திருமாவளவன் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தான் இருக்கிறேன் என தெளிவாக சொல்லிவிட்டார். நாங்கள் மன்னராட்சி நடத்தவில்லை; ஜனநாயக ஆட்சி தான் நடத்துகிறோம். எங்களிடம் வாரிசு அரசியல் கிடையாது. உழைப்பால் தான் வந்திருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்ட தலைவர் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொண்டர்கள் ஒவ்வொருவரும் போராடி அமைச்சர் உதயநிதிக்கு ஏற்றுக் கொடுத்த பதவி தான் துணை முதலமைச்சர் பதவி. வாரிசு என்ற அடிப்படையில் அவருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வரவில்லை. அரசியலில் யாருக்கு வேண்டும் என்றாலும் பதில் சொல்லலாம். அதற்கு தகுந்த நேரம் வர வேண்டும். இன்றைக்கு விஜய் அந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் இல்லை என்பது தான் எங்களுடைய கருத்து" என புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details