சென்னை\சேலம்:பொங்கல் திருநாளையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், இந்த நிகழ்வில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து, சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்தை தெரிவித்தனர்.
அந்த வகையில், திமுக எம்பி டி.ஆர்.பாலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சக்கரபாணி, ஆவடி நாசர் மற்றும் எம்எல்ஏக்கள் முதல்வரை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்தை பகிர்ந்துகொண்டனர்.
குடும்பத்துடன் முதல்வர்
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த நிகழ்வில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி
அதேபோல சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது, தாரை தப்பட்டை முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்வுகளோடு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் கோவில் திடலில் அமைக்கப்பட்டிருந்த 108 பொங்கல் பானையில் புத்தரிசி போட்டு விழாவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் வள்ளி கும்மி ஆட்டத்தினை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
இதையும் படிங்க:அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்.... ஏன் தெரியுமா?
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, '' விவசாயிகளோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்; 2026-ல் தை திருநாளை கொண்டாடும் போது தீய சக்தி திமுகவை வேரோடு வீட்டிற்கு அனுப்புவோம். அதற்கு முன்னோடி ஆண்டாக இந்தாண்டு பொங்கல் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் காரணமாக கிராம பொருளாதாரம் உயர்ந்து விளங்கியது. தொடர்ந்து 5 ஆண்டுகள் வேளாண் துறையில் சாதனை படைத்து மத்திய அரசின் விருதுகளை பெற்றது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து கொள்ளை புறவழியாக திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. இந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு பூஜ்ஜியம் மதிப்பெண் தான் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு நன்மை இல்லை அவர்களின் வீட்டு மக்களுக்கு மட்டுமே நன்மை; இதற்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்கும்'' எனறார்.