கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகரம், கவுண்டம்பாளையம் பகுதியில், பண பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்ததாக கூறி, திமுக-வை சேர்ந்தவர்களை பாஜகவினர் பிடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
18-வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 4 ஆயிரத்து 650 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், கோயம்புத்தூர் தொகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களை பிடித்து, பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட ஒருவரிடம் பாஜகவினர் விசாரித்ததில் தனது பெயர் மனோஜ் (23) எனவும், திமுகவைச்சேர்ந்த சம்பத் ஓட்டுக்கு பணமளிக்க சொன்னதால், வந்து பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து பிடிபட்ட மனோஜ் என்பவரை தேர்தல் அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மனோஜை துடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 42,500 ரூபாயை பறிமுதல் செய்த துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பண பட்டுவாடாவில் ஈடுபட்டிருந்ததாக கூறி, திமுக-வை சேர்ந்தவர்களை பாஜகவினர் பிடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:ரூ.4,650 கோடி பணம், ரூ.2,068 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் எவ்வளவு? - Lok Sabha Election 2024