தூத்துக்குடி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் பிரசாரம் நடைபெற்றது.
இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை மாவட்டச் செயலாளர் கவியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு வாக்கு சேகரித்தனர்.
பிரசாரத்தின் போது பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ, "தமிழகத்தில் பாஜக தலைமையிலான 3-ஆவது அணியை பற்றி நமக்கு கவலையில்லை. அதிமுகவிற்கு எதிரி திமுக தான். திமுக, அதிமுகவிற்கு மட்டுமல்ல இந்த நாட்டு மக்களுக்கு எதிரி தான். கடந்த தேர்தல்களில் போது, தமிழகத்தில் டாஸ்மாக்கினால் கைம்பெண்கள் அதிகமாகி விட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தததும் தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என்று கனிமொழி உட்பட திமுகவினர் பலர் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது டாஸ்மாக் எண்ணிக்கை அதிகரித்தது. அது மட்டுமின்றி, டாஸ்மாக்கில் நிர்ணயம் செய்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்பட்டது.
இதால், அந்த துறையை சேர்ந்த அமைச்சருக்கு ரூ.10 பாலாஜி என்ற பெயரும் வந்தது. மேலும், இதன் மூலம் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து திமுக குடும்பத்திற்கு கொடுத்து விட்டு, தற்போது அவர் சிறையில் உள்ளார். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது. போதைப் பொருள் கடத்தல் செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உள்ள புகைப்படங்கள் உள்ளன.
தமிழகம் முழுவதும் பெட்டிக்கடை வரை போதைப்பொருள் தாளமாகக் கிடைக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மின்சாரத்தினை தொட்டால் ஷாக் அடிக்கும் அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டவிரோமாக சம்பாதித்த பணத்தை வைத்து இந்த தேர்தலில் மக்களுக்கு ஓட்டுக்காக ரூ.200 முதல் 500வரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என திமுக நினைக்கிறது. திமுக கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். தமிழகம் நலன் குறித்து வைத்த கோரிக்கைகள் குறித்து காது கொடுத்து கேட்கவில்லை என்பதால் தான் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்தோம்.
பாஜக, காங்கிரஸ் என எந்த தேசிய கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று வெளியே வந்து நம்மை விரும்பியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவுடனான கூட்டணியிலிருந்தனர். அப்போது இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைப்போன்ற தற்பொழுது இந்த கூட்டணி வெற்றி பெறும் எனக் கூறினார்.
இதையும் படிங்க:"பாஜகவின் பி டீம் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும்" - சிபிஎம் பிரகாஷ் காரத் காட்டம்!