கோயம்புத்தூர்: திமுகவின் கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோவை அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு, அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வாயிலாக, வாக்காளர்களுக்கு தலா ரூ.250 வீதம் பணம் அனுப்பப்படுவதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அலுவலகத்தில் தங்கி இருப்பவர்களின் பெயர் மற்றும் ஊர் குறித்த தகவல்களுடன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடிக்கு இந்த புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், "கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். சிங்காநல்லூர், காந்திபுரம், துடியலூர், மேட்டுப்பாளையம், வடவள்ளி போன்ற இடங்களில் ஓட்டுக்கு பணம் அளித்து வருவதாகவும், குறிப்பாக, கவுண்டம்பாளையம் - இடையர்பாளையம் செல்லும் வழியில் தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள குடோனில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து அன்னதானம் கொடுப்பது போல் பணம் கொடுத்து வருகின்றனர்.