டிடிவி தினகரன் பேட்டி (Video Credits to ETV Bharat Tamil Nadu) சேலம்:பேய்க்கு பதிலாக, பிசாசு கொண்டு வந்த கதையாக திமுக ஆட்சி நடைபெறுவதாக மக்கள் தமிழ்நாடு முழுவதும் வருத்தப்படுகிறார்கள் என சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் இன்று (மே.09) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சியின் சாதனை என்பது மக்களை ஏமாற்றுவதும், மக்களுக்குத் துரோகம் செய்வதுதான். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்சனைகள் தலை தூக்கும். திமுக ஆட்சி வரும் 2026 ஆம் ஆண்டு மிகப்பெரிய வீழ்ச்சியடையும் என்பது உறுதி.
சவுக்கு சங்கர் எனக்கும் நண்பர் தான், ஆனால் காவல்துறையைப் பற்றி அவர் பேசிய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் சிறைச்சாலையில் சவுக்கு சங்கர் தவறாக நடத்தப்பட்டு, அடிக்கப்பட்டார் என்ற தகவல்கள் உண்மையில் வருத்தமளிக்கிறது. சிறையில் அவருக்குக் கொடுமை நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது.
சவுக்கு சங்கர் எடப்பாடிக்கு ஆதரவாக மாறி உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி சவுக்கு சங்கருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார். எடப்பாடி என்ற துரோக சிந்தனையுள்ள மனிதனை ஆதரிப்பதால், சவுக்கு சங்கர் இந்த நிலைக்கு ஆளாவதாக நினைக்கிறேன். திமுக வந்தால் மின்வெட்டு வந்துவிடும் என்று அனைவருக்கும் தெரியும், திமுக வந்தால் திமுகவின் அராஜகம் பட்டிதொட்டி எல்லாம் பரவிவிடும்.
மின்வெட்டு காரணமாக திமுக ஆட்சி கருணாநிதி காலத்தில் பறிபோயுள்ளது, அவ்வாறு இருந்தும் திருந்தமாட்டார்கள். மின்வெட்டிற்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மக்கள் வாக்களித்ததன் காரணமாகப் பேய்க்கு பதிலாக, பிசாசு கொண்டு வந்த கதையாக திமுக ஆட்சி நடைபெறுவதாக மக்கள் தமிழ்நாடு முழுவதும் வருத்தப்படுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்பது தான் எல்லோருடைய விருப்பமும். மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உறுதியாக 2026 ஆம் ஆண்டு திமுகவை வீழ்த்துவோம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் கள்ளர் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், கல்வித்துறையில் இணைக்கப்படுவது அவசியமல்ல, இதையெல்லாம் கண்டித்து வருகிறோம்.
தமிழக மக்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எதிரான ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவாகக் கண்டுபிடித்துத் தண்டிக்கப்பட வேண்டும்”, என்று கூறினார். இந்த சந்திப்பின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.கே.செல்வம் மற்றும் கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் நேர்காணல்; ஊடகவியலாளர் முன்ஜாமீன் மனு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு! - Journalist Felix Gerald Bail Case