சென்னை:திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளராக செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக்கிற்கும், டெல்லியில் நேற்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அதனால் கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி போலீசாருடன் இணைந்து போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், டெல்லியில் நேற்று 50 கிலோ சுடோபெட்ரின் ரசாயனம் கடத்திய 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சுடோபெட்ரின் ரசாயனம், போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் திமுகவில் அவர் வகித்த பதிவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் கயல் ஆனந்தி நடிப்பில் ‘மங்கை’, இயக்குநர் அமீர் நடிப்பில் ‘இறைவன் மிகப் பெரியவன்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; டெல்லியில் 3 தமிழர்கள் கைது - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பிருப்பதாக தகவல்!