சென்னை:பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இத்தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.
மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டிவரும் நிலையில், மாநில கட்சியான திமுக, இத்தேர்தலில் சப்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளது. அதுவும், சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கு இதற்கு நடைபெற்றுள்ள 17 மக்களவைத் தேர்தல்களில், காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்தபோதும், கருணாநிதி தலைமையில் திமுக முன்பு ஆளுங்கட்சியாக இருந்தபோதும் நிகழ்த்தாத சாதனையை, நடைபெற்ற முடிந்துள்ள 2024 மக்களவைத் தேர்தலில், ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக நிகழ்த்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 39 மற்றும் புதுச்சேரியில் ஒன்று என இரண்டு மாநிலங்களிலும் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளை மொத்தமாக அள்ளியுள்ளது திமுக கூட்டணி. இந்த சாதனை இதற்கு முன், காங்கிரஸ், அதிமுக ஆகியவை தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தபோதும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுகவே தமிழகத்தை ஆண்டபோதும் நிகழ்த்தப்படாத சாதனை என்பதே, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு படைத்துள்ள இச்சாதனையின் சிறப்பு என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள்.
இதற்கு முன்பும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனியில் அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். ஆனால் அப்போது அதிமுக தமிழகத்தின் ஆளுங்கட்சியாகவும், திமுக பிரதான எதிர்க்கட்சியாகவும் இருந்தன.
இதுவே 2014 மக்களவைத் தேர்தலின்போது, தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றது.