சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணங்கள், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பணம் கடத்தி செல்லப்படுவதாக தாம்பரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து ரயில்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக 3 நபர்கள் இருந்துள்ளனர்.
அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த 6 பைகளில் சோதனை நடத்தியதில், அதில் கட்டுகட்டாக சுமார் 4 கோடி மதிப்பிலான பணம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த நான்கு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில், பணத்தைக் கடத்த முயன்றவர்கள் சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் என தெரிய வந்துள்ளது. மேலும், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய முதலாளி எனவும், தான் புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான புளு டைமண்ட் ஓட்டல் மேலாளராக உள்ளதாகவும் சதிஷ் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், பெருமாள் என்பவர் நயினாரின் உறவினர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மூவரையும் கைது செய்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
மேலும், அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் ,பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் விசாரனை மேற்கொண்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட அந்த ஓட்டலில் இருந்து தான் நான்கு கோடி ரூபாய் பணம் கொண்டு வரப்பட்டதாக கைது செய்யப்பட்ட மூவரும் தெரிவித்த நிலையில், பறக்கும் படையினர் ஓட்டலில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், நயினார் நாகேந்திரனின் உறவினரான விருகம்பாக்கத்தில் உள்ள முருகன் என்பவரது வீட்டிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என கூறப்படுகிறது. மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட நவீன், சதீஷ் மற்றும் பெருமாள் ஆகிய மூவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பணத்தை ஒன்று சேர்த்துக் கொண்டு சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள் விடுதி ஒன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும், சென்னை யானைக்கவுனி பகுதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு தொகையாக ஒன்று சேர்த்து, இந்த நான்கு கோடி ரூபாயை அவர்கள் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. கார் மூலமாக கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விடுவார்கள் என்று, ரயிலில் கொண்டு சென்ற போது பறிமுதல் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரனின் லெட்டர் பேட் மூலமாக, ரயிலில் ஏசி பெட்டியில் முன்பதிவு செய்து பயணித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை விசாரணை நடத்தும் நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வருமான வரித்துறையினர் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், ஏப்ரல் 6ஆம் தேதி திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரயிலில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 4.5 கோடி பணத்தை நேற்று பிடித்துள்ளனர். இந்தப் பணத்தை திருநேல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக, அவரின் உதவியாளர் சதீஷ் மற்றும் 2 பேர் தெரிவித்தாக தகவல் வருகிறது.
மேலும், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டைமண்ட் ஹோட்டலில் சோதனை செய்துள்ளனர். இந்தப் பணம் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பல கோடி பணத்தை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
நயினார் நாகேந்திரன் பெரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதேபோல், பாரதிய ஜனதா கட்சியும், தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏ.சி.சண்முகத்தின் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்! - Bomb Threat