தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு.. திமுக ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? - Nellai Mayor Candidate

Nellai Mayor Candidate: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்ற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 11:13 AM IST

Updated : Aug 4, 2024, 1:34 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்ற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, நாளை மறைமுக மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கே.என்.நேரு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இவ்வாறு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிட்டு, நெல்லை மாநகராட்சியின் 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார். மேலும், இவர் 1980 முதல் திமுக உறுப்பினராக உள்ளார். 2வது முறை கவுன்சிலராகவும், அதேநேரம் 5 முறை திமுக வட்டச் செயலாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியான திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

அந்த வகையில், நெல்லை மாநகர திமுகவில் நிலவும் கடும் உட்கட்சி பூசல் காரணமாக மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் மீது கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வந்தனர். மேலும், அவரை மாற்றும்படி தொடர்ச்சியாக திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், நெல்லை மேயராக இருந்த சரவணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கோவை மாநகராட்சி மேயரும் உள்கட்சி பூசல் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தடுத்து ஆளுங்கட்சி மேயர்கள் இருவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நீடித்து வந்தது. ஏற்கனவே உள்கட்சி பூசல் நிலவுவதால், அடுத்ததாக மீண்டும் போடப்படும் மேயர் அனைத்து கவுன்சிலர்களையும் அனுசரித்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டும் என திமுக தலைமை முடிவு செய்தது. எனவே, மேயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனவே, அவர்கள் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, அப்துல் வகாப் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டது. மேயர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சரவணன் மாவட்ட பொறுப்பாளர் அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பிரச்னை இல்லாத நபரை மேயராக தேர்ந்தெடுக்க அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, நாளை மறைமுக தேர்தல் நடைபெறுவதால் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று நெல்லை வந்து தங்கினர். இதனைத் தொடர்ந்து, இன்று அவர்கள் கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய நிலையில், நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் (எ) கிட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல்லை டவுனைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (எ) கிட்டு திமுகவின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் அனைவரிடமும் நட்பு பழகக் கூடியவர். மேலும், இவர் மூன்றாவது முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி நிர்வாக ரீதியாக இவர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான அப்துல் வகாப் அணியில் இருந்து வருகிறார். எனவே, மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராமகிருஷ்ணனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதில் அப்துல் வகாப் அணிக்கும், மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் அணிக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. மைதீன் கான் தனது அணியைச் சேர்ந்த உலகநாதன் அல்லது கருப்பசாமி ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், அப்துல் வகாப் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?மைதீன் கான் தற்போது மாவட்ட பொறுப்பாளராக இருந்தாலும் கூட, முன்னாள் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்பை விட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பலம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். குறிப்பாக, நெல்லை மாநகராட்சியில் 44 திமுக கவுன்சிலர்கள் உள்ள நிலையில், அதில் 90% பேர் அப்துல் வகாப் அணியைச் சேர்ந்தவராக உள்ளனர். அதனால் தான் மாவட்ட பொறுப்பாளர் அணியைச் சேர்ந்த சரவணன் மேயராக இருந்தபோது தொடர்ச்சியாக அவருக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர். எனவே, மாவட்ட பொறுப்பாளர் அணியிலிருந்து வேட்பாளராகத் தேர்வு செய்தால் மீண்டும் பிரச்னை ஏற்படும் எனக் கருதி, அப்துல் வகாப் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

வெற்றி வாய்ப்பு:நெல்லை மாநகராட்சியைப் பொறுத்தவரை, மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 44 வார்டுகளில் திமுக உறுப்பினர்களும், ஏழு வார்டுகளில் காங்கிரஸ், மதிமுக போன்ற திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் மீதமுள்ள நான்கு வார்டுகளில் அதிமுக உறுப்பினர்களும் உள்ளனர். எனவே திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக இருப்பதால் நாளை நடைபெறும் மேயர் தேர்தலில் திமுக அணியைச் சேர்ந்த வேட்பாளர் ராமகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா.. திருநெல்வேலி ஆணையர் கூறியது என்ன?

Last Updated : Aug 4, 2024, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details