திமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் பரபரப்பு திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், அவ்வப்போது தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் அய்யனூர் கிராமப் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு 2 பேர் அங்குமிங்குமாக சுற்றித் திரிந்துள்ளனர். அதனைக் கண்ட மாதனூர் ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் தலைமையிலான திமுகவினர் இருவரையும் சுற்றி வளைத்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சொர்ண பூசனம் மற்றும் காட்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிகளை மீறி பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி, தேர்தல் பறக்கும் படை மற்றும் ஆம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்பூர் போலீசார் மற்றும் அஹமது ஜலாலுதீன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர் பட்டியலுடன் சுற்றித் திரிந்த இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த திமுகவினர், "இவர்கள் இருவரும் வெளியூர்காரர்கள், இந்த நேரத்தில் வாக்காளர் பட்டியலுடன் இங்கு என்ன செய்கின்றனர்" என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
அப்போது அந்த நபர்களிடம் பேசிய அதிகாரிகள், "பணப்பட்டுவாடா செய்வது தேர்தல் விதிகளுக்கு எதிரான குற்றம் எனத் தெரியாதா" என விசாரணை செய்து வந்தனர். அந்த நேரத்தில் திடீரென கூடிய பாஜகவினரால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, திமுக - பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனடியாக அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்தனர்.
அதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் அஹமது ஜலாலுதீன் அளித்த புகாரின் பேரில், சொர்ண பூசனம் மற்றும் ராஜேஷ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை பிரச்சாரம்? திமுக - பாஜகவினர் மோதல்.. கோவையில் களேபரம் - நடந்தது என்ன? - Lok Sabha Election 2024