சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் நாளை (மார்ச் 25) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவரையில் சுயேட்சைகள் உட்பட 78 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரி தொகுதியில் சுயேட்சையாக ஒருவர் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேரு, சுயேட்சையாக வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதனைத் தொடர்ந்து, 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படும். அதன் பின்னர், 30ஆம் தேதி மாலை 3 மணி வரையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். அதன் பின்னர், இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களை உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், விளவங்கோடு இடைத்தேர்தலுக்கும் அ.தி.மு.க, பாஜக கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.