சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சி துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், நினைவஞ்சலியைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நினைவுத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடுவோம் என உறுதிமொழியேற்றனர்.
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) தீர்மானங்கள்:மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சைபர் கிரைம் போன்ற நவீன விஞ்ஞான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மாநகராட்சி சொத்து வரி ஏற்றியதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். மேகதாது பிரச்சினைக்கு ராசிமணலில் அணை கட்ட வேண்டும். கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்லும் கனிம வளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து உயர்த்திய மின்கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: 2026-ல் பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் வளர்ச்சிக்கும், வியூகங்களை அமைத்து தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும் பணிக்காகவும் மிகச் சிறந்த முறையில் ஆலோசனை நடத்தியுள்ளோம். ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் சந்திக்கும் மாபெரும் சுற்றுப்பயணம் உள்ளது. இதுதொடர்பாக ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்படும்.
சரித்திர சாதனை படைத்தவர் கேப்டன்: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பொழுது கொடுத்த வாக்குறுதிகள் இன்றளவும் நிறைவேற்றவில்லை. அதில் ஒரு பகுதியாக ஆசிரியர் பெருமக்கள் பல்வேறு போராட்டங்களில் நடத்தி வருகிறார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அவர்கள் போராட்டங்களை நடத்த வேண்டியதில்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று களத்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களைப் பார்த்துப் பேசும் பொழுது தான், எவ்வளவு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பது தெரிகிறது.
விஜய் குறித்த நிலைப்பாட்டை நீங்கள் விஜயிடம் தான் கேட்க வேண்டும். அவரின் எண்ணம் என்ன? வியூகம் என்ன? கூட்டணியா.. இல்லையா? என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் தான் கேட்க வேண்டும். விஜய் மாநாடு அன்று என்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் நான் பதிவிட்ட தகவல் தேமுதிக நிர்வாகிகள் எனக்கு அனுப்பியதுதான். அதை தான் நான் பகிர்ந்தேன். தமிழ்நாட்டில் மாபெரும் மாநாடு நடத்தி சரித்திர சாதனை படைத்தவர் கேப்டன்.
230 தொகுதிகளிலும் வெற்றி: ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அந்த தொகுதி முடிவு தெரிவதற்கு முன்பாகவே அவர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக முதலமைச்சரே சொன்னார். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள். அவர்களுக்கு எந்த அளவிற்கு கான்ஃபிடன்ஸ் உள்ளதோ அதே அளவிற்கு எங்களுக்கு உள்ளது.
200 அல்ல 230 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதற்கான வியூகம், கூட்டணி என்பதை அந்தந்த கால கட்டங்களில் அமைத்து அறிவிப்போம். மூத்த நிர்வாகிகள் கலந்து பேசி செயற்குழு பொதுக்குழு எப்போது என்பதை அறிவிக்க இருக்கிறோம். அப்போது கட்சி நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று, விஜய் பிரபாகரனுக்கு மட்டுமல்ல பல முக்கிய நிர்வாகிகளுக்கு பதவிகளை அறிவிக்கவுள்ளோம்.
கூட்டணி தொடருமா?: ஒருநாள் மழைக்கே சென்னை மாநகரம் தாங்கவில்லை என்பது ஒட்டுமொத்த சென்னைவாசிகளுக்கு தெரியும். தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் எப்படி உள்ளது என்பது தெரியும். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் வாய் சவுடால் விட்டுக் கொண்டுள்ளார்கள். திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் உள்ளது. இது 2026ஆம் ஆண்டு வரை தொடருமா? என்ற கேள்வி உள்ளது. இந்த திமுகவின் கூட்டணி ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
சினிமா டயலாக் கிடையாது: திமுக ஆட்சி வாடகைக்கு வாங்கும் ஆட்சியாக தான் பார்க்கிறேன். மழை வந்தால் போட், பேருந்து என அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் ஆட்சியாக உள்ளது. நிரந்தர தீர்வை ஏற்படுத்தி மக்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் அரசாக ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் டிசம்பர் மாதம் பெரு மழை உள்ளது. போட் வாடகை எடுத்தால் பத்தாது. இது ஒரு நாள் மழைக்கு தான் தொடர்ந்து மழை பெய்தால் என்ன ஆகும் என்பது தெரியாது தொலைநோக்கு பார்வையோடு நிரந்தரவு தீர்வு ஏற்படுத்த வேண்டும். உதயநிதி ஸ்டாலின் எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என்று சொல்லியுள்ளார். இது சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது.
அமரன் படக்குழுவுக்கு வாழ்த்து: இதுவரை அமரன் திரைப்படம் பார்க்கவில்லை. அமரன் திரைப்படம் எப்படி இருந்தாலும் அது பாராட்டப்படக்கூடிய விஷயம். முகுந்தனின் இறப்பு தான் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு படக் குழுவினருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். ஒருபுறம் வாழ்த்திருந்தால் ஒரு புறம் பிரச்சனை இருக்கும். திரையிட்டு ஒரு வார காலத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். உண்மை, பொய் என்ன என்பதை ஆராய்ந்து தமிழக அரசு தீர்வு தர வேண்டும்.
ஒருவர் புதிய கட்சி ஆரம்பித்த நடத்திவிட்டார் என்ற காரணத்தால்தான் மற்றக் கட்சிகள் தேர்தலுக்கு இப்போதே வியூகங்கள் அமைத்து பணிகள் தொடங்குகிறார்கள் என்பது தவறான ஒன்று. தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்குவது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் தேமுதிக தொடங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்