செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வருவதாகவும், அவர்கள் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வரும் நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பெயரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், தாம்பரம், பள்ளிக்கரணை துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றி அமைந்துள்ள 500க்கும் மேற்பட்ட விடுதிகள், வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் 19 மாணவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து அரை கிலோ கஞ்சா, போதை சாக்லேட் 6, கஞ்சா எண்ணெய் 20 மி.லி, பாங்கு 5, புகை பிடிக்கும் பானை 1, குட்கா 7, குட்கா தூள் 6 ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மாணவர்களுக்கு தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்து வந்தது ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடி என்பது தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி(29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 2 1/2 கிலோ கஞ்சா, நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செல்வமணி அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.