திருவண்ணாமலை:உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாதா மாதம் பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் நடந்து சென்று, அருணாசலேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கிரிவலம் வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது, அருணாசலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் முன்பு, நகர மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். கழிவறை மற்றும் ஒப்பனை அறை சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக இருப்பதைக் கண்டு ஒப்பந்தத்தை நீக்க உத்தரவிட்டார். பேருந்தில் வரும் பெரும்பாலானோர் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையையே பயன்படுத்துகின்றனர்.