கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களுக்குள் போட்டிப்போட்டுக் கொண்டு மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கோவை மாநகரின் ஒண்டிபுதூர் பகுதியில்பிரச்சாரம் செய்ய வந்த திருமுருகன் காந்தி தலைமையிலான மே 17 இயக்கத்தினருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, அங்கு வந்த போலீசார், மே 17 இயக்கத்தினரை டி-சர்ட்டை கழற்றுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நேற்றிரவு ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சில கருத்துகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரிய வருகிறது.
இதனிடையே, அப்போது அங்கு வந்த பாஜகவைச் சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி தலைமையில் வந்த அக்கட்சியினர், மே 17 இயக்கத்தினரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதத்தின் போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை ஒருமையில் பேசியதாகவும், பாலாஜி உத்தம ராமசாமி அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.