சென்னை :கருவூலக் கணக்குத் துறையின் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில், அரசின் தரவு மையம், ஓய்வூதிய இயக்குநரகம், சிறு சேமிப்புத் துறை ஆகியன மறு சீரமைப்பு செய்யப்படும் என கடந்த 2022 - 2023ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்துவதற்கு ஏற்ற பரிந்துரைகளை கருவூலக் கணக்குத் துறையின் ஆணையர் தமிழக அரசுக்கு வழங்கி இருந்தார். அதன்படி, ஓய்வூதியத் துறை இயக்குநரகம், அரசின் தரவு மையம் ஆகியன கருவூலக் கணக்குத் துறையுடன் இணைக்கப்படுவதற்கான உத்தரவை நிதித்துறை முதன்மைச் செயலர் டி.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "நிதித்துறையால் கடந்த 12ம் தேதி அரசாணை (நிலை) எண் 343ல் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் ஆகிய துறைகள் கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரண்டு துறைத் தலைவர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதிய இயக்குநகரம் என்பதும் ஒழித்து கட்டப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப்பதற்கும், ஓய்வூதியர் இறந்தால் அவர்களுக்கு குடும்பப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ஓய்வூதிய இயக்குநரால் மாவட்டந்தோறும் நடத்தப்படும் ஓய்வூதியர் அதாலத் ஆகியவை அனைத்தும் இனிமேல் கருவூலக் கணக்குத் துறை ஆணையரால் கூடுதலாக நிர்வகிக்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளித்த முதன்மையான வாக்குறுதியான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது என்பதை ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றாது என்பதற்கு கட்டியம் கூறும் வகையில், ஓய்வூதிய இயக்குநரகத்தினை கருவூலக் கணக்குத் துறையுடன் இணைத்திருக்கும் நடவடிக்கையானது உள்ளது. இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை முதற்கண் பதிவு செய்கிறது.
நிதி சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வாய்ப்பில்லை :கடந்த நவ 8ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு, "பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை. நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் தேர்தலுக்குள் நிறைவேற்ற முதலமைச்சர் அறிவுறுத்தல்" என்ற செய்தியானது காட்டுத் தீயாக அனைத்து சமூக ஊடகங்களிலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் பரவியது.
இதனையடுத்து, கடந்த நவ 13ம் தேதியன்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை அதிலும் குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல், காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றின் மீதான கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தின் வாயிலாக கோரிக்கை வைத்தது.
இதோடு மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களைப் பொறுத்தவரை வாக்குறுதிகள் எள்ளளவும் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, தற்போதைய ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு என்பது கடந்த ஏப் 1ம் தேதி 2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளோருக்கு இனிமேல் ஓய்வூதியம் என்பது கானல் நீர்தான் என்பதை தமிழ்நாடு அரசு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
இதையும் படிங்க :அரசு ஊழியர்கள் பிரச்னை: வெற்று அறிக்கை நம்பிக்கை தராது என அரசை தாக்கிய சங்கம்!
இந்த அரசாணையானது, கடந்த 2022-23ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை) அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. என்ற சூழ்நிலையில், இது தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை : கடந்த நவ 8ம் தேதியன்று அன்றைய பள்ளிக்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தெரிவித்ததாக வந்த செய்திகளையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஆகியோர் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிக்கைகள் வெளியிட்டபோது, அதற்கான பதில் அறிக்கைகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற தொனியில் இல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு பதில் சொல்லும் வகையிலேயே இருந்ததை இத்தருணத்தில் உற்று நோக்க வேண்டி உள்ளது.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுதல் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்ட சரண் விடுப்பு உரிமை காலவரையின்றி முடக்கம், 4 லட்சத்திற்கு மேலாக காலிப் பணியிடங்களை நிரப்பாதது, அதிலும் குறிப்பாக, குரூப்-டி பணியாளர்களை தனியார் முகமை மூலமாக தொகுப்பூதியம், மதிப்பூதியம் என நிரப்புதல் ஆகிய தாக்குதல்களை தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மீது தொடுத்துவரும், திராவிட முன்னேற்றக் கழக-திராவிட மாடல் அரசின் தற்போதைய நடவடிக்கையான ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நடவடிக்கையாக இருக்கிறது. இதற்கு மேலும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் ஊழியர் விரோதப் போக்கினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் குறைகளை ஓரளவேனும் தீர்க்கும் ஒரு அரணாக இருந்த ஓய்வூதிய இயக்குநர் என்ற துறைத் தலைவர் கீழான இயக்குநகரத்தினை மூடுவது என்பது ஓய்வூதியர்கள்-மூத்த குடிமக்கள் நலன் குறித்து தமிழ்நாடு அரசு கவலைப்படவில்லை என்பதனையே காட்டுகிறது.
மேலும், ஏறத்தாழ 7 லட்சம் ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 90 விழுக்காடு, கருவூலக் கணக்குத் துறையின் செயல்பாடுகளால் தான். இப்போது, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான தனியான இயக்குநர் இல்லாமல், கருவூல கணக்குத் துறையின் தலைவரே ஏற்கனவே உள்ள பொறுப்புகளோடு இதனையும் சேர்த்து கவனிப்பார் என்பது ஏற்புடையதல்ல. பெரும்பாலும், இயக்குநரின் அடுத்த நிலையிலுள்ள ஒரு அலுவலருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு அதனை நிர்வகிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் சூழல் உள்ளது.
மறு சீரமைப்பு : மத்திய அரசில், ஓய்வூதியர்களுக்கான தனியான துறை இருக்கும்போது, தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவந்த ஓய்வூதிய இயக்குநரகத்தின் பணிகளை மேலும் செழுமைப்படுத்துவதற்கு பதிலாக, பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, மறுசீரமைப்பு என்ற பெயரில் கருவூலக் கணக்குத் துறையுடன் இணைப்பது என்பதை எள்ளவும் ஏற்க இயலாது. ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்களுக்கான தனியான அதிகாரம் படைத்த இயக்குநரகம் என்ற அடையாளம் என்பது அழிக்கப்பட்டு விட்டது என்று தான் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் இதனைப் பார்க்கிறது.
பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை "தேர்தல் கால வாக்குறுதிகள் 100 விழுக்காடு நிறைவேற்றப்படும்" என்ற உத்தரவாதத்தினை அளித்தாலும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து நேரிடையாக குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசின் சார்பாக காகித அறிக்கைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் : புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கடந்த ஜன 1, 2004 முதல் நடைமுறைப்படுத்தியுள்ள மத்திய அரசு கூட, அரசு ஊழியர்களின் ஓய்வுகால நலனைக் கருத்தில்கொண்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என கொண்டு வந்து, 50 விழுக்காடு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு எத்தருணத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தாது என்பதையே நிதித்துறையின் அரசாணை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
வாக்குறுதி நிறைவேற்றவில்லை : அதிமுக கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் குறித்து எந்த வாக்குறுதியினையும் வழங்காததற்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கும் எந்த வகையிலும் வேறுபாடு என்பதே இல்லை என்பதுதான் ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு என்பதாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
அதிருப்தியை போக்குக : தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, நிதித்துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையினை ரத்து செய்துவிட்டு, ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்களுக்கான அடையாளமாக விளங்கக்கூடிய ஓய்வூதிய இயக்குநரகத்தினை மீண்டும் பழைய நிலையிலேயே செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அளித்த மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதியினை நிறைவேற்றுவதற்கு உயிரோட்டம் அளித்து, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் மத்தியில் தமிழ்நாடு அரசு மீது ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தியை போக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்