தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்: இயக்குநர் மோகன் ஜி காலையில் கைது.. மாலையில் விடுவிப்பு! - Mohan Ji

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குள்ளான கருத்தை கூறியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவருக்கு சொந்த பிணை வழங்கி விடுவித்துள்ளது.

இயக்குநர் மோகன் ஜி, அவரது வழக்கறிஞர் காஜா மொய்தீன்
இயக்குநர் மோகன் ஜி, அவரது வழக்கறிஞர் காஜா மொய்தீன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 10:47 PM IST

Updated : Sep 24, 2024, 11:07 PM IST

திருச்சி : திருச்சி மாவட்டம், சமயபுரம் கோயில் மேலாளர் கவிராஜன் கொடுத்த புகாரில், "நான் பணியில் இருந்த போது இந்து மதத்தையும் இந்து கோயில்களையும் பற்றி தமிழ்த் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி இழிவுப்படுத்துவதாக பக்தர்கள் பேசிக்கெண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து எனது செல்போனை பார்த்தபோது ஒரு YouTube தளத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக உண்மைக்கு புறம்பாக விமர்சனம் செய்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும், தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருட்களான மீன் எண்ணெய்யும், மாட்டு கொழுப்பும் உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள் தமிழக மக்களிடையே மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலும், மத கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பொய்யான செய்தியை தமிழ்த் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேசியுள்ளார்.

அவர் மீது நடவடிக்ககை எடுக்கும்படி கவிராஜன் கொடுத்த புகாரின் பேரில், சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மோகன் ஜி கைது செய்யப்பட்டு இன்று மாலை திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்பொழுது வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன் ஜி பேசிய சொற்கள் தவறாக இருந்தாலும், போலீசார் அவரை கைது செய்ததற்கான உரிய காரணங்களை தெரிவிக்காததால் இந்த வழக்கிலிருந்து அவரை சொந்த பினையில் விடுவிப்பதாக நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் காஜா மொய்தீன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க :பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரையா? மோகன் ஜி கைதும், போலீசாரின் விளக்கமும்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரின் வழக்கறிஞர் காஜா மொய்தீன்,"இன்று காலை சென்னை வண்ணாரப் பேட்டையில் உள்ள மோகன் ஜியின் இல்லத்தில் 8:20 மணிக்கு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு இன்று மாலை 3 மணிக்குள் சமயபுரம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் நேற்று வழங்கப்பட்டதாக போலீசார் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

தனக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என மோகன் ஜி நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும், தன்னிடம் நோட்டீஸ் நேற்றே வழங்கப்பட்டது போல் இன்று மாலை நீதிமன்றத்திற்கு வரும் வழியில் தன்னிடம் கையெழுத்து பெற்றதாக மோகன் ஜி நீதிபதியிடம் முறையிட்டார்.

இதனை அடுத்து நீதிபதி காவல் போலீசாரிடம் இன்று மாலை 3 மணிக்குள் சமயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என மோகன் ஜியிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளீர்கள் என கூறி உள்ளீர்கள். அப்படி இருக்கும் பொழுது இன்று காலை 8:20 மணி அளவில் அவரது இல்லத்திற்கு சென்று கைது செய்தது ஏன்? 3 மணிக்கு அவர் சமயபுரம் காவல் நிலையத்தில் ஆஜரான பின் நீங்கள் கைது செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். மேலும், கைது செய்வதற்கான முறையான காரணங்களை நீங்கள் குறிப்பிடவில்லை எனக் கூறி நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்" என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

Last Updated : Sep 24, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details