தூத்துக்குடி: தூத்துக்குடியில் சினிமா படப் பிடிப்பிற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், "பைசன் திரைப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) ஏற்கனவே ஒரு மாதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த ஒரு மாதத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் தான் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தில் கதைக்களம் தென்மாவட்டங்களில் தான் உள்ளது. உண்மைச் சம்பவங்களும் உள்ளது, புனையப்பட்ட கதையும் உள்ளது" என்றார்.
திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவது தொடர்பான கேள்விக்கு, "அனைவரது வீட்டிலும் சாமி புகைப்படம் உள்ளது, பூஜை அறை உள்ளது. இருந்தாலும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவது குறையவில்லையே. அதுபோலதான், மக்கள் அனைவரும் கூடி பார்ப்பதும் மாறாது. ஓடிடி என்பது நூலகம் மாதிரி தான். ஆனால், சினிமா என்றாலே கூட்டமாக பார்ப்பது என்பதால், தியேட்டரின் மவுசு குறையாது.
தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிக் கொலைகள் தொடர்பான கேள்விக்கு, அடிப்படையாகவே நிறைய மாற்றங்கள், புரிதல்கள் தேவைப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் அதிகளவு விவாதங்கள் தேவை. இதனை உடனடியாக மாற்ற முடியாது. ஏனென்றால், தென் மாவட்டங்களில் உள்ளவர்களிடம் காலம் காலமாக மனதில் ஆழமாகத் தங்கியுள்ள ஒரு விஷயம் இது.
இதனை மாற்ற மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. ஏனெனில், இதை ஒரே நாளில் மாற்ற முடியாது, மாற்றும் சூழ்நிலையிலும் இல்லை. சாதி என்பது தென்மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் உள்ளது. உடனடியாக சட்டம் கொண்டு வந்தால் மாற்றலாம் என நாம் சாதாரணமாக கூறுகின்றோம், அப்படியெல்லாம் முடியாது. ஏனென்றால், இது உளவியலாக ஸ்டாரங்காக உள்ளது.
இதற்காக எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்ட துறைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் கொஞ்சமாவது மாற்றம் வரும். ஒரு புரிதலுக்கு உள்ளாகும் என நினைக்கிறேன்” என்றார். அதனையடுத்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காக்களூர் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து: 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! மற்றவர்களின் நிலை என்ன?