தூத்துக்குடி:உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று (திங்கட்கிழமை) ஆனி உத்திர வருசாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அவரது உதவி இயக்குநர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர்.
அப்போது அவர்களை செய்தியாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்கள், செய்தியாளர்கள் வீடியோ எடுத்ததை தடுத்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கிருந்த செய்தியாளர்களின் கேமரா மற்றும் செல்போனை தட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்தியாளர்கள் எங்கள் வேலையை எதற்கு தடுக்கிறீர்கள் என்று கூறி ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவரது உதவி இயக்குநர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்த சம்பவம் கோயில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஏ.ஆர்.முருகதாஸுடன் புகைப்படம் எடுக்க நினைத்த அவரது ரசிகர்களும் புகைப்படம் எடுக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் படுகொலை; நினைவேந்தல் பேரணிக்கு பா.ரஞ்சித் அழைப்பு!