திருநெல்வேலி:துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், செயலாளர் நமச்சிவாயம் ஏற்பாட்டில் நெல்லை பேட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுகிழமை (டிச.8) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாடநூல் நிறுவன தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இரண்டு ஆண்டுகளில் முதல்வராவேன் என பேசுகிறார்கள். நெஞ்சில் குடியிருக்கும் என பேசும் அவரது முதல் வாக்கியமே தவறானது. நெஞ்சில் குடியிருப்பவர்கள் எப்பது வேண்டுமானாலும் காலி செய்துவிடுவார்கள். நேற்று கட்சி ஆரம்பித்தவர் எல்லாம் திமுகவை கை நீட்டி பேசும் காலமாகிவிட்டது.
உடனே உதயநிதிக்கு பதவி கொடுக்கவில்லை:
அவர்கள் பேசுவது விளம்பரத்திற்கும், சினிமாவுக்கும் நன்றாக இருக்கும். பல ஆண்டு காலம், பல போராட்டங்கள் மூலம் கட்டப்பட்ட இரும்பு கோட்டையாக திமுக இருக்கிறது. திமுகவிற்கு அடுத்தகட்ட தலைவராக உதயநிதி ஸ்டாலின் தயாராகிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் பல படிகளை தாண்டி பல போராட்டங்களுக்காக குரல் கொடுத்தவர்.
படித்து முடித்துவிட்டு வந்தவுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கவில்லை. 2019 தேர்தலில் 234 தொகுதியிலும் உதயநிதி பரப்புரை மேற்கொண்டவர். படிப்படியாக பதவிகளை பெற்றவர். உலகமே தமிழக விளையாட்டு துறையை திரும்பி பார்க்க வைத்தவர். அடுக்கடுக்காக தனது பணியை சிறப்பாக செய்ததால் தான் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவில் கூட திமுகவை அதிமுக காப்பி அடித்துள்ளது. திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏ.ஐ தொழில்நுட்பத்தில் மக்கள் மத்தியில் கொண்டு வந்ததை போல், ஜானகி நூற்றாண்டு விழாவில் எம்ஜியாரை ஏஐயில் கொண்டு வந்தனர். ஜெயகுமாரின் வாயால் தான் அதிமுகவின் கூட்டணி நாசமாக போய்விட்டது. அதிமுகவை கொல்லவே அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை வைத்துள்ளனர்.