தஞ்சாவூர்:உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா நேற்று, இன்று என இரண்டு நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பெரியக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் பட்டிமன்றம், கருத்தரங்கம், பரத நாட்டியம், மேடை நிகழ்ச்சிகள், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று பெரியகோயிலில் தேவார பதிகத்திற்கு பூஜைகள் செய்து, யானை மேல் தேவாரப் பதிகம் வைத்து, மங்கள வாத்தியங்கள், சிவகணங்கள் இசைக்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ராஜராஜனுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை செலுத்திய அதிகாரிகள்:பின் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆதினம் பேட்டி:அப்போது அவரிடம் சூரியனார் கோயில் ஆதினம் சர்ச்சை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ திருச்சி உய்ய கொண்டான் மலை கோயிலில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அங்கு அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள். அங்கு அது குறித்து பேசுவோம்” என்றார்.
இதையும் படிங்க:"ராஜராஜ சோழன் தமிழ் பல்கலைக்கழகம்" - நீதிபதி கோரிக்கை!
தமிழக அரசு ஆன்மீக அரசு:மேலும் பேசிய அவர், “தமிழக அரசு பதவி ஏற்ற உடன் ஆன்மீக அரசு என்று கூறினேன். அதை மெய்ப்பிக்கும் வகையில் குடமுழுக்கு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்டுமானம் விரைவில் செயல்படுத்தி கும்பாபிஷேகம் செய்வது என்பது சாதனையாக இருக்கிறது.
பெரிய கோயில்கள் மட்டுமல்லாமல், சிறிய கோவிலுக்கும் ரூபாய் 2 லட்சம் கொடுத்து கும்பாபிஷேகத்தை செய்து வைக்கிறார்கள். மேலும் அரசு நித்திய படி பூசைக்காகவும், சொத்துக்களை மீட்டுக் கொடுப்பதற்கும் இந்த முடிவு செய்து எங்களுடைய ஆதீனத்தின் சார்பில் திருச்செந்தூரில் 400 கோடி சொத்து, திருச்சியில் 500 கோடி சொத்து நிலங்களை இதுவரை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
சதய விழா சிறப்பு நிகழ்ச்சிகள்:முன்னதாக கோயில் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கி மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பெண் ஓதுவார்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் திருமுறைகள், தேவாரங்களை பாடியபடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து இராஜவீதிகளில் ஒதுவார்களின் திருமுறைத் திருவீதி உலா நடைபெற்றது.
இந்த விழாவில் எம்பி முரசொலி, மாநகராட்சி மேயர் இராமநாதன், சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, திருமுறை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, தேவாரப் பண்ணிசை, பரதநாட்டியம், சுவாமி திருவீதி உலா, சிறப்பு வயலின் இன்னிசை, மாமன்னன் ராசராசன் விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.