தருமபுரி:பென்னாகரம் அருகே அலகட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை, மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபாதையாக தூக்கிச் சென்ற நிலையில் சிறுமி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது அலகட்டு மலைகிராமம். இந்த மலைகிராமம் கடல்மட்டத்தில் இருந்து 1,132 அடி உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 29 வீடுகளில், 42 குடும்பத்தில் 153 நபா்கள் வசித்து வருகின்றனர். அலகட்டு மலைகிராமத்தில் இருந்து சாலைக்கு வருவதற்கு மூன்றரை கிலோமீட்டர் செங்குத்து வழியாகவும், நான்கு கிலோமீட்டர் காட்டுபகுதி மலைபாதையாகவும் உள்ளது.
இந்நிலையில், கடந்த சிலமாதங்களுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், இப்பகுதியில் உள்ள பாதைகளில், சில இடங்களில் சீர் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாதை சேதமடைந்து வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இப்பகுதிக்கு முறையான சாலை வசதி கேட்டு மலை கிராம மக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அலகட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா- சிவலிங்கி தம்பதியினரின் மகள் கஸ்தூரி (13). இவர் நேற்று( நவ.28) வியாழக்கிழமை, அவரக்ளது தோட்டத்தில் கீரை பறிக்கச் சென்றபோது பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள், அவரை அலகட்டு மலை கிராமத்தில் இருந்து, சீங்காடு கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம், தொட்டில் கட்டி தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு துக்கிச் சென்றுள்ளனர்.