தருமபுரி: ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
அப்பொழுது பெண் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி, ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அலுவலர்களுக்கு பாட்டுப்போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன. இதில் அலுவலர்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றுகின்ற கவிதை, சினிமா பாடல்களைப் பாடி உற்சாகமடைந்தனர்.
மேலும் இசை நாற்காலி, அசைவுகளில் திரைப்படங்களில் வரும் ஏதேனும் குறிப்பிட்ட காட்சியை நடித்துக் காட்டுதல், ஒரு பிரிவினர் திரைப்படத்தின் பெயரை சொல்லுதல் போட்டி, பாட்டுக்கு பாட்டு போன்ற விளையாட்டு போட்டிகள் என நடத்தப்பட்டன. இதில் பாட்டுக்கு பாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சாந்தி, ஊழியர்கள் பாடி முடிக்கின்ற எழுத்தில் உடனடியாக, மாவட்ட ஆட்சியர் இடைவெளி இல்லாமல் பாடல்கள் பாடி அசத்தினார்.