சென்னை:பொங்கலை விழாவை முன்னிட்டு கிராமமாக மாறிய தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி ஆவடி மைதானத்தில், அலங்கரிக்கப்பட்ட மாதிரி கிராம கூரை வீடு, மாட்டு வண்டி, குதிரை வண்டி என அனைத்தும் கிராம சுழலை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் நபர்கள் பொங்கலுக்கு முன்னதாகவே தங்களது அலுவலகங்களில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலைச் சிறப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை இரண்டாம் அணி மைதானத்தில், நேற்று ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில், சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராகத் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தனது மனைவியுடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்.
அப்போது, காவல் அதிகாரிகள் அவர்களுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்கப் பூரண கும்ப மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து சங்கர் ஜிவால் அவரது மனைவியுடன் புது பானையில் பொங்கலிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.