திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபானி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். மலையில் உள்ள கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல படிப்பதை, யானை பாதை வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகள் எளிதாக சாமி தரிசனம் செய்யக் கோயில் நிர்வாகம் சார்பில், மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் சேவையை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒரு மின் இழுவை ரயிலுக்கு 36 நபர் மூலம் மூன்று ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், பழனி கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான சந்திரமோகன், மூன்றாவது மின் இழுவை ரயில் பெட்டியை அகற்றிவிட்டு, புதியதாக 72 பேர் செல்லும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டியைச் சொந்த செலவில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வாங்கி நன்கொடையாக வழங்கினார்.
அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது சரி செய்யப்பட்டு ஐஐடி குழுவினரால் ஆய்வு செய்து தர சான்றிதழும் வழங்கப்பட்டு விட்டது. கடந்த ஓராண்டுக் காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவை சரி செய்யப்பட்டும் கடந்த ஆறு மாதமாக இயக்கவில்லை என்றும், பராமரிப்பு பணிகள் முடிந்தும் அமைச்சரின் தேதிக்காகக் காத்திருப்பதால் கோயில் நிர்வாகத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கைக்குழந்தை வைத்திருக்கும் பக்தர்கள் சுமார் 4 முதல் 5 மணி நேரம் காத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஞான தண்டாயுதபாணி பக்தர் பேரவை செந்தில் குமார், இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களைக் கருத்தில் கொள்ளாமல் அமைச்சர் வருகைக்காக சுமார் ஆறு மாத காலம் இயக்காமல் இருப்பது ஏன்?, பக்தர்கள் நலன் மீது அக்கறை இல்லையா?, தைப்பூசம் முடிவதற்குள் மூன்றாவது வின்ச் இயக்கவில்லை என்றால் அனைத்து இந்து அமைப்புகளும் சேர்ந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:தைப்பூசத் திருவிழா: பழனியில் கோயிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்!