கோயம்புத்தூர்:டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி 10ஆம் நாளில் அம்மனை அழைப்பதற்காக கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், சாய்பாபா காலனியில் உள்ள விநாயகர் கோயிலில், இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு, "வேசுக்கோ... தீசுக்கோ" என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தி போட்டு உடலில் ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனை அழைத்தனர்.
இதனால் பக்தர்களின் உடலில் இருந்து ரத்தம் வழிந்து ஓடியது. மேலும், அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக் கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியால் பக்தர்கள் உடலில் உள்ள காயங்கள் 3 நாட்களில் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவை கத்தி போடும் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu) இதனையடுத்து, ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்து டவுன்ஹாலில் உள்ள சௌடேஸ்வரி கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெறும். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர். மேலும், இவ்விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த பெரியநாயகி அம்மன்!
இது குறித்து ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாகத் தலைவர் கூறுகையில், “ விஜயதசமி நாளில் கத்தி போடும் விழா சிறப்பானதாகும். இவை கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கத்தி போடும் விழாவில் அம்மனை அழைப்பது மிகவும் சிறப்பு. பக்தர்கள் விருப்பப்பட்டு விழாவில் கலந்துக்கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். கோபித்துக்கொண்ட கடவுளை ரத்தம் சிந்தி அழைத்து வருவது இந்த திருவிழாவின் ஐதீகமாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கத்தி போட்ட பக்தர் கூறுகையில், “ தான் தனது 8 வயதில் இருந்து கத்தி போடுகிறேன். 2 கத்தியில் ஆரம்பித்தேன், தற்போது 50 கத்தியில் போடுகிறேன். இதற்கு மஞ்சள் தான் தீர்வு” என்றார்.